Published : 17 Jul 2021 04:25 PM
Last Updated : 17 Jul 2021 04:25 PM
நாடே உங்களின் வெற்றிச் செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறது என தமிழக ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து தடகளப் போட்டிகளுக்கு தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்களான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் , தனலெட்சுமி சேகர் , ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி, மற்றும் தடகளப் போட்டிக்கான தலைமை பயிற்சியாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோருடன் மதுரை எம்.பி. இணையவழியில் உரையாடினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
"ஒலிம்பிக் தேர்வாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்தில் இருந்து தடகளப் போட்டிகளுக்கு 5 பேர் பங்கேற்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
அவர்கள் பயிற்சி பெறும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தேசிய தடகள மைதானத்தில் நேரடியாக சந்திப்பதற்கு நேரம் நிச்சயித்திருந்தேன். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒலிம்பிக் போட்டிக்கான கோவிட் கால விதிமுறைகளை கூறியதால், அந்த நேரடியான சந்திப்பினை வீரர்களின் நலன் கருதி தவிர்த்தேன்.
எனவே இன்று இணைய வழியில் அவர்களை சந்தித்து உரையாடினேன். தமிழகத்தில் இருந்து தடகளப் போட்டிகளுக்கு முதல் முறையாக ஐந்து பேரும், முதல் முறையாக மூன்று பெண்களும், அதனினும் சிறப்பாக மதுரையில் இருந்து முதல் வீரராக ரேவதி வீரமணி கலந்து கொள்வது மிகச் சிறப்பு. இத்தகைய முதல் முறை என்னும் சாதனைகளின் தொடர்ச்சியாக ஒலிம்பிக் தடகள போட்டிகளிலும் முதல் இடத்தினை உறுதியாக்குவீர்கள் என்னும் வாழ்த்தினை கூறினேன்.
மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் நிலைக்குழு உறுப்பினர் என்கிற முறையில் அந்தக் கூட்டங்களில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து தொடர்ந்து விவாதித்து வந்திருக்கிறேன்.
கடந்த ஆண்டு 2020 ல் டோக்கியோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கோவிட் காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்ட போது,வீரர்களின் தொடர் பயிற்சிக்காக கூடுதலாக எவ்வளவு நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பது என்பது குறித்து பல மணி நேரம் பேசியுள்ளேம்.
அப்போதெல்லாம் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து மொத்தம் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்? அதில் தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருப்பார்கள் ? என பலமுறை எண்ணியுள்ளேன். ஆனால் மதுரையில் இருந்து ஒரு வீராங்கனை செல்வார் என எதிர்பார்க்கவில்லை. இது மிகுந்த மகிழ்வை உருவாக்கியது. பல்வேறு தடைகளை மீறி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ள இவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது நிச்சயம்.
வாருங்கள் வீரர்களே !
நாடே உங்களின் வெற்றிச் செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறது என நான் கூறினேன். தலைமை தடகளப் பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் “ வீரர்கள் மிகச் சிறப்பான பயிற்சியை பெற்று தயாராகி இருக்கிறார்கள். நிச்சயம் வெல்வார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT