Published : 17 Jul 2021 04:46 PM
Last Updated : 17 Jul 2021 04:46 PM
கோயில் நிலம் மற்றும் பொதுப்பணித்துறை கால்வாயில் குப்பைகள், மாமிசக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, ஒத்தக்கடையைச் சேர்ந்த கே.கவிதா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
''உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு எதிரே யா.ஒத்தக்கடை கோதண்டராமர் கோயிலுக்குச் சொந்தமான 9.49 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்குப் பின்னால் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாய் மற்றும் கோயில் நிலத்தில் ஆடு, கோழி மற்றும் மீன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என அறநிலையத்துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயில் நிலத்தில் குப்பைகள், மாமிசக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோயில் நிலம் மற்றும் கால்வாயைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கோதண்டராமர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் பொதுப்பணித்துறை கால்வாயில் குப்பை, கழிவுகள் கொட்டுவதற்குத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
''கோயில் நிலத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கிறது. இதனால் கோயில் நிலம் மற்றும் பொதுப்பணித் துறை கால்வாயில் குப்பைகள், மாமிசக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அங்கு குப்பைகள், கழிவுகளைக் கொட்டுபவர்களின் குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டிக்கலாம்.
கால்வாய் மற்றும் கோயில் நிலத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி, அவை தூய்மையாகப் பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற செயல்கள் இத்துடன் நிறுத்தப்படும் என நீதிமன்றம் நம்புகிறது.
இதற்காக மாவட்ட ஆட்சியர், வல்லுநர் குழு அமைக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலம், கால்வாயில் குப்பைகள் கொட்டக்கூடாது எனப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ய வேண்டும்''.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT