Published : 17 Jul 2021 04:06 PM
Last Updated : 17 Jul 2021 04:06 PM

சிபிஐ அதிகாரிகள் என நடித்து சோமாலிய நாட்டுக் குடிமகனிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி: 5 ஈரானியர்கள் உட்பட 6 பேர் கைது

சென்னை

சோமாலிய நாட்டைச் சேர்ந்தவரிடம் சிபிஐ போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளை கும்பலைச் சேர்ந்த 6 பேரை ஆயிரம் விளக்கு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சோமாலியா நாட்டைச் சேர்ந்தவர் அலி அகமது முகமது (61). அந்த நாட்டில் தனியார் பள்ளியில் முதல்வராகப் பணியில் உள்ளார். இவரது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதால், சென்னை, கல்லூரிச் சாலையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கடந்த 13ஆம் தேதி தனது உறவினருடன் வந்துள்ளார்.

அவருக்கு சென்னை குறித்த பழக்கம் இல்லாததால் சென்னை, சித்தாலப்பாக்கத்தில் வசிக்கும் கைடு அப்துல் (35) உதவிக்கு வந்துள்ளார். இருவரும் சென்னை ஆயிரம் விளக்கு, மாடல் பள்ளி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். கடந்த 13ஆம் தேதி வழக்கம்போல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டுத் தாங்கள் தங்கியுள்ள மாடல் பள்ளி சாலையில் உள்ள தங்கும் விடுதி நோக்கி அலி அகமது முகமதுவும், அப்துலும் நடந்து வந்தனர்.

அப்போது அவர்களை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று மறித்து நின்றது. அதிலிருந்து தடதடவென்று 3 பேர் இறங்கியுள்ளனர். தாங்கள் சிபிஐ போலீஸ் எனக் கூறி உங்களை விசாரிக்க வேண்டும் என மிரட்டல் தொனியில் கூறியுள்ளனர். நான் சோமாலியா நாட்டைச் சேர்ந்த பள்ளி முதல்வர், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளேன் என அலி அகமது முகமது சொன்னதை அவர்கள் கேட்கவில்லை.

சோமாலியாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்துள்ளீர்களா எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். உங்கள் பைகளைக் காட்டுங்கள், போதை மருந்து இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் என உடமைகளை சோதனையிட்டுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலரைப் பறித்துக் கொண்ட அவர்கள், உங்கள் அறை விலாசத்தைச் சொல்லுங்கள், இரவு வந்து சோதனையிட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

பின்னர் வேகமாக காரில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர். வந்தவர்கள் வழிப்பறி நபர்கள் எனத் தெரிந்துகொண்ட அலி அகமது முகமது, உடனடியாக இதுகுறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்களையும் ஆய்வு செய்தனர். இதில் காரின் பதிவெண், செல்போன் எண்கள் கிடைத்தன. அதன் டவர், சிசிடிவி காட்சிகளின் தொடர்ச்சியை போலீஸ் தனிப்படை ஆய்வு செய்தபோது அவர்கள் கோவளத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று மாலை கோவளம் விரைந்தனர். கோவளத்தில் தங்கியிருந்த விடுதியை போலீஸார் சோதனையிட்டனர். அங்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 ஆண்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் தங்கியிருந்தனர். இதில் அலி அகமது முகமதுவிடம் வழிப்பறி செய்த 3 ஆண்களும் சிக்கினர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த மற்ற மூவரையும் போலீஸார் கைது செய்து அழைத்து வந்தனர்.

கைதான 6 பேர் விவரம்:

1. ஷபீர் (35) துணிக்கடை வியாபாரம், 2. ரூஸ்தம்சைதி (28) துணிக்கடை வியாபாரம், 3. ஷியவஸ் (26) மாணவர், 4.பெக்ருஷா (35) ஹோட்டலில் வேலை, 5. பினியாமின் (19) சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறார். மேற்கண்ட 5 பேரும் ஈரான் நாட்டிலுள்ள தெஹ்ரானைச் சேர்ந்தவர்கள். 6. புருஷ் அலிபனா (56) இவர் மட்டும் புதுடெல்லியைச் சேர்ந்தவர். சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறார்

பிடிபட்ட 6 பேரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இதுதவிர வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் தங்கியுள்ளனர், முறையான அனுமதியுடன் தங்கியுள்ளனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு ஹோண்டா சிட்டி சொகுசு கார், ஒரு ஹுண்டய் கார், 13 செல்போன்கள், ஈரான் நோட்டு 5 லட்சம், 28 அமெரிக்கன் டாலர், இந்திய ரூபாய் 57,000 ரொக்கப் பணத்தைக் கைப்பற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x