Last Updated : 17 Jul, 2021 03:15 AM

 

Published : 17 Jul 2021 03:15 AM
Last Updated : 17 Jul 2021 03:15 AM

ரூ.10.25 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள அய்யன், சாமந்தான் குளங்களில் நீர் நிரப்பப்படுமா? - தஞ்சாவூர் மாநகர மக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ள தஞ்சாவூர் அய்யன் குளம், சாமந்தான் குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தஞ்சாவூரில் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் நீர் மேலாண்மைக்காக பல்வேறு குளங்கள் வெட்டப்பட்டன. அதில் சிவங்கை பூங்கா குளம், அய்யன் குளம், சாமந்தான் குளம், அழகி குளம் ஆகியவை பிரதானமாகும்.

இதில், குப்பை மேடாக காணப்பட்ட சாமந்தான்குளத்தையும், பயன்பாடு இல்லாமல் இருந்த அய்யன் குளத்தையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்க ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், அய்யன்குளத்துக்கு நீர் வழிப்பாதை கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டது. மேலும், குளம் தூர் வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள், சுவர் ஓவியங்கள், தடுப்பு அரண்கள், இருக்கைகள் ஆகியவை அமைக்கப்பட்டன. தொடர்ந்து, குளம் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, கடந்த ஆட்சியில் திறப்பு விழாவும் காணப்பட்டது. தற்போது இந்த குளத்தில் மழைநீர் மட்டுமே சிறிதளவு தேங்கியுள்ளது.

தற்போது கல்லணைக் கால்வாய் ஆற்றில் தண்ணீர் வருவதை பயன்படுத்தி, அய்யன் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும். அதைத் தொடர்ந்து, அய்யன்குளத்திலிருந்து சாமந்தான் குளத்துக்கு உள்ள நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த குளத்திலும் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் கூறியது:

தஞ்சாவூரில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கிய அய்யன் குளம், சாமந்தான் குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்டு கடந்த ஆட்சியில் திறப்பு விழா காணப்பட்டது.

தற்போது, ஆறுகளில் தண்ணீர் வருவதால், அய்யன் குளத்துக்கு ஆற்று நீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டும். இதனால், அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

அதேபோல, சாமந்தான் குளத்துக்கு உள்ள நீர் வழிப் பாதையை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த குளத்தையும் நீரால் நிரப்ப வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறும்போது, ‘‘கல்லணைக் கால்வாயில் தற்போது குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரும்போது அய்யன் குளத்தில் நீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x