Published : 07 Feb 2016 03:58 PM
Last Updated : 07 Feb 2016 03:58 PM

குமரியில் தடம் பதிக்க மக்கள் நலக்கூட்டணி வியூகம்: தொடர் போராட்டங்களை முன்னெடுக்க திட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, அதிமுகவுக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் கடும் போட்டியை கொடுக்க தயாராகி வருகிறது மக்கள் நலக்கூட்டணி. மாவட்டம் முழுவதும் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2006 தேர்தலின் போது 7 சட்டப்பேரவை தொகுதிகள் இருந்தன. அதன்பின் மறுசீரமைப்பில் திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது. இதையடுத்து 2011-ம் ஆண்டு தேர்தலில் சட்டப்பேரவை தொகுதி 6-ஆக சுருங்கியது.

பணிகள் தீவிரம்

தற்போது நாகர்கோவில், கன்னியாகுமரி தொகுதிகள் அதிமுக வசமும், பத்மநாபபுரம் தொகுதி திமுக வசமும், மீதமுள்ள 3 தொகுதிகள் காங்கிரஸ் வசமும் உள்ளன. இதில், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ஜான்ஜேக்கப் தமாகா கட்சிக்கு சென்று விட்டார்.

மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில், வரும் தேர்தலில் இந்த குறையைப்போக்க பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

மதிமுக- மார்க்சிஸ்ட்

இந்த தேர்தலில் கன்னியாகுமரியில் மீண்டும் தடம்பதிக்க வேண்டிய கட்டாயத்தில் மதிமுக உள்ளதால் அக்கட்சியினர் நாகர்கோவில் நகரில் தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 2001-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது குளச்சல் தொகுதியில் மதிமுக 37,000 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தது. இத்தனைக்கும் அப்போது தனித்து களம் கண்டது மதிமுக.

கடந்த 2006 தேர்தலின்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு திருவட்டாறு, விளவங்கோடு என இரு தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இப்போது மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியும் இந்த தேர்தலில் வெற்றிபெற பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

பலன் கிடைக்குமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான கட்சிகளாக உள்ள பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகியவை கூட்டணி முடிவு செய்யப்படாமல் உள்ள நிலையில் மக்கள் நலக் கூட்டணி, 4 கட்சி தொண்டர்களோடு தொடர் ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

இப்போது இந்த கூட்டணியினர் ஒன்றியங்கள், கிளைக் கழகங்கள் வாயிலாக தொடர் தேர்தல் ஆயத்த கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒன்றிய அளவில் உள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்து குழு அமைத்து பட்டியல் தயாரித்து வருகின்றனர். இந்த பிரச்சினைகளை மையப்படுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவும் மக்கள் நலக் கூட்டணியினர் முடிவு செய்துள்ளனர்.

பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியும், நாகர் கோவில், குளச்சலில் மதிமுகவும் கணிசமாக உள்ளது.

இவர்களின் போராட்டங் களுக்கும், ஆயத்த கூட்டங் களுக்கும் பலன் கிடைக்குமா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான கட்சிகளாக உள்ள பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகியவை கூட்டணி முடிவு செய்யப்படாமல் உள்ள நிலையில் மக்கள் நலக் கூட்டணி, 4 கட்சி தொண்டர்களோடு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x