Published : 16 Jul 2021 07:15 PM
Last Updated : 16 Jul 2021 07:15 PM
கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மாநில பணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
கரோனா 3-வது அலையை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்தில், "கரோனா 3-வது அலை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் கூறியதாவது:‘‘கரோனா 3 வது அலை பரவலை எதிர்கொள்ள சுகாதாரத்துறை செயலர், சுகாதாரத்துறை இயக்குநர், குழந்தை நல மருத்துவர்கள் கொண்ட மாநில பணிக் குழு (ஸ்டேட் டாஸ்க் போர்ஸ்) உருவாக்கப்பட்டுள்ளது.
இதே போல, துணை தாசில்தார், மருத்துவக் கண்காணிப்பாளர், துணை மாவட்ட ஆட்சியர் கொண்ட மாவட்ட பணிக் குழு (டிஸ்டிரிக் டாஸ்க் போர்ஸ்) உருவாக்கப்படவுள்ளது. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்களுக்கும்,முன்களப் பணியாளர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கரோனா அறிகுறிகள் தென்படும் குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய குழந்தைகளுக்கான சிறப்பு பிரத்யேக வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றில் கரோனா பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சையளிக்கப்படும். மேலும், தேவையான மருந்துகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு தேவைக்கேற்ப வழங்கப்படும். புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய குழந்தைகளுக்கான தனி படுக்கைகள் உருவாக்கப்பட்டு, அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் இதுவரை கரோனா 3-வது அலையின் அறிகுறியோ அல்லது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டதாகவோ சான்றுகள் இல்லை. தற்போது வரை கரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மூன்றாம் அலையிலிருந்து தப்பிக்கவும் குழந்தைகளுக்கு கரோனா ஏற்படாமல் பாதுகாக்கவும் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.’’இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT