Published : 16 Jul 2021 06:18 PM
Last Updated : 16 Jul 2021 06:18 PM
கிராமப்புறங்களுக்கு அரசு அதிகாரிகளை அழைத்துச்சென்று அங்கேயே அவர்களின் குறைகளைக் கேட்டு, தீர்த்து வைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் வி.ஏ.கரீம் சாலையில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா இன்று (ஜூலை 16) நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அ.செ.வில்வநாதன் வரவேற்றார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் தலைமை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, வேலூர் எம்.பி. அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து எம்.பி. கதிர் ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோர் மனுக்களைப் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் கூறியதாவது:
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஆம்பூர் என்பதால் இங்கு ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. எம்.பி. அலுவலகம் தினமும் திறக்கப்படும். தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் நானே நேரில் வந்து பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க உள்ளேன்.
இது தவிர பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களுக்கு அரசு அதிகாரிகளை அழைத்துச்சென்று அங்கேயே அவர்களின் குறைகளைக் கேட்டு, தீர்த்து வைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பு முறையாகத் தெரிவிக்கப்படும்.
ஆம்பூர் ரெட்டிதோப்புப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, ஆம்பூர் ராஜீவ் காந்தி சிலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.150 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்றாம்பள்ளி அடுத்த மல்லகுண்டா பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க ஏற்கெனவே இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோரிடம் வேலூர் எம்.பி. என்ற முறையில் நான் கோரிக்கையும் விடுத்துள்ளேன்.
வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தை அமைக்க நீண்ட காலமாகப் பணிகள் கிடப்பில் உள்ளன. அங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க அங்குள்ள இடம் கையகப்படுத்தப்பட வேண்டும். அப்படியே மேம்பாலம் அமைத்தால் அனைத்து வாகனங்களும் அந்த வழியாகச் செல்ல முடியுமா? அதற்கான இடவசதிகள் உள்ளதா? எனப் பல கேள்விகள் எழுவதால் அங்கு மேம்பாலம் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
இருந்தாலும் பொதுமக்களின் நலன் கருதி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அங்கு சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சுரங்கப்பாதை அமைக்க வாணியம்பாடி நகராட்சி மற்றும் ரயில்வே துறை ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இதற்காக அவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள் தெரிவிக்கப்படும்’’.
இவ்வாறு வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவராஜ் (ஜோலார்பேட்டை), அமலுவிஜயன் (குடியாத்தம்) மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT