Published : 16 Jul 2021 05:28 PM
Last Updated : 16 Jul 2021 05:28 PM
ஓசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கேள்வி பதில் வடிவில் “கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கரோனா தொற்று நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை நமது உடலில் உருவாக்கத் தடுப்பூசி அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே ஏற்படும் சந்தேகங்களுக்குக் கேள்வி - பதில் வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வுப் புத்தகத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆ.சிவக்குமார் உருவாக்கியுள்ளார்.
இந்தப் புத்தகத்தில் தடுப்பூசி என்றால் என்ன, உலகில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முன்பு இருந்த நிலை என்ன, தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கின்றன, தடுப்பூசியைக் கண்டு சிலர் அஞ்சுவதற்குக் காரணம் என்ன, தடுப்பூசி செலுத்தினால் கரோனா தொற்று ஏற்படாதா, பெரியம்மை, போலியோ ஆகியவற்றைத் தடுப்பூசி மூலம் தடுத்தது போன்று, ஏன் கரோனாவைத் தடுப்பூசி மூலம் ஒழிக்க முடியவில்லை, தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதும், அதன்பின் முகக்கவசம், சமூக இடைவெளி எல்லாம் தேவையில்லையென நினைக்கிறார்களே... இந்தக் கருத்து சரியா, தடுப்பூசி பாதுகாப்பானதாக இருக்குமா, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் தடுப்பூசி மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மருந்துகளைப் போலவே பயனுள்ளதாக இருக்குமா, கரோனா தொற்றுள்ள ஒருவருக்குத் தடுப்பூசி போடலாமா, தொற்றிலிருந்து மீண்ட ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமா, இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்த பின்னரும் சிலருக்கு கரோனா தொற்று ஏற்படுவது ஏன் என்பன உட்படப் பல்வேறு கேள்விகளுக்கும் அனைவரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் எளிய நடையில் பதில் எழுதப்பட்டுள்ளது.
இந்தப் புத்தக வெளியீட்டு விழா ஓசூர் அரசு மருத்துவமனை அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆ.சிவக்குமார் தலைமை தாங்கினார். ஓசூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிப் பொறுப்பாளர் மருத்துவர் மகேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் சேதுராமன் அறிமுக உரையாற்றினார்.
இதில் ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.பூபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியைத் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலாளர் சுப்பிரமணி, ஓசூர் வட்டார மருத்துவ அலுவலர் விவேக், ஓசூர் மேக்னம் அரிமா சங்க செயல் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி இறுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் அரிச்சந்திரன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓசூர் நிழல் அறக்கட்டளை, வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை, ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல்வேறு சேவை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT