Published : 16 Jul 2021 05:22 PM
Last Updated : 16 Jul 2021 05:22 PM
பாஜகவுக்கு சேவகனாக இருப்பேன் என, தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, இன்று (ஜூலை 16) கமலாலயத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:
"எல்.முருகன் தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றபின் நான் இந்தக் கட்சியில் இணைந்தேன். கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் இணைந்தேன். சாதாரண கிராமமான தொட்டம்பட்டி கிராமத்தில் பிறந்த நான், விவசாயத்தின் மூலம் படித்து இந்தியக் காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. 9 ஆண்டுகள் பணியாற்றியபின் இந்தியா மீது இருந்த பற்றினால், தேசபக்தியின் காரணமாக கடினமான முடிவை எடுத்து, என் பணியைத் துறந்து ஒரு வருட காலம் எனக்குப் பிடித்த விவசாயத்தையும், அறக்கட்டளை பணிகளிலும் ஈடுபட்டேன்.
அரசியலுக்கு வருவது இது சரியான நேரம் என்று எனக்குத் தோன்றிய காரணத்தால், முருகன் தலைமையில் கட்சியில் இணைந்து, கடந்த 10 மாதங்களாகத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று, என் பணியைச் செய்துகொண்டு வந்தேன். இங்கிருக்கும் தலைவர்களும் டெல்லியில் இருக்கும் தலைவர்களும், கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்கின்றனர். இந்தப் பதவியை மிகுந்த ஆனந்தத்துடன் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
எங்கள் கட்சி வித்தியாசமானது. எனது அனுபவம் குறைந்ததாக இருக்கலாம். இந்தக் கட்சியை தொண்டர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்திருக்கின்றனர். திருமணம் ஆகாமல் 90 வயதுவரை கட்சியை வழிநடத்தியவர்கள் இருக்கின்றனர். இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்குக் கொடுத்திருப்பதால், நன்றாகப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
சட்டப்பேரவையில் நயினார் நாகேந்திரன் சிங்கம் போலக் குரல் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் என்பது என் பணிவான ஆசை. மாநில, மத்திய தலைமையின் விருப்பமும் அதுதான்.
திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்கள் இன்றுடன் முடிகிறது. 70 நாட்கள் இந்த ஆட்சியை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். குற்றம் சொல்லியே அரசியல் நடத்த முடியும் என்பதைக் காண்பித்த திமுக, 70 நாட்களில் ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.
2006-2016 வரை 29,725 மருத்துவ மாணவர்கள் தமிழகத்தில் படித்தார்கள். நீட் தேர்வுக்கு முன்பு வருடத்துக்கு 19 கிராமப்புற மாணவர்கள் மட்டுமே மருத்துவம் பயின்றனர். நீட் வந்த பின்பு, கிராமப்புற மாணவர்கள் 430 பேர் மருத்துவம் பயின்றனர். இதுதான் உண்மையான சமூக நீதி.
கிராமப்புற மாணவர்களுக்காக மத்திய அரசு செயல்படுகிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு வேறு வேண்டாம். நீட் வந்தபின்புதான் எங்களைப்போன்று சாதாரணக் குடும்பத்தில் வந்தவர்கள் மருத்துவம் பயில்கின்றனர். அவர்கள் என்ன கமிட்டி அமைத்தாலும், அறிக்கை சமர்ப்பித்தாலும் சரி.
மூலை முடுக்கெல்லாம் பாஜக செல்லும். அனைத்து மக்களையும் சந்தித்து நீட் குறித்து எடுத்துக்கூறுவோம். நீட் மக்களுக்கு நல்லதென்று சொல்வோம். நீட் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் உள்ள மாநிலம் தமிழகம். அப்போதிருந்த முதல்வர் பழனிசாமி, 2 ஆண்டுகள் பாடத்திட்டத்தை திருத்தியமைத்தார். நீட் தேர்வில் 173 கேள்விகள் மாநில பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளன. அப்போது, ஏன் இதனை எதிர்க்க வேண்டும்?
டிச. 31, 2021-க்குள் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என பிரதமர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து, நாம் ஜூன் 26-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருக்கிறோம். நேற்று ஒரு நாள் மட்டும் 66 கோடி தடுப்பூசிக்கு ரூ.14,000 கோடி செலவில் ஆர்டர் செய்திருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனம் இன்னும் 30 கோடி தடுப்பூசிகள் வழங்கத் தயாராக இருக்கிறது. மொத்தம் 96 கோடி டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு ஆர்டர் செய்திருக்கிறது.
தமிழகத்துக்கு தடுப்பூசிகள் முறையாகக் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எவ்வளவு தடுப்பூசி கொடுக்கப்பட்டிருக்கிறது, இன்னும் எவ்வளவு வேண்டும், எவ்வளவு நோயாளிகள் இருக்கின்றனர் என்பதன் அடிப்படையில் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் 15 நாட்களுக்கு முன்பாகவே அடுத்த 15 நாட்களுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் வரும், எப்படி திட்டமிட வேண்டும் என்ற தகவலை மத்திய அரசு கொடுக்கிறது. அப்படியிருக்கும்போது கடைசி வரைக்கும் காத்திருந்து மத்திய அரசு எங்களுக்குக் கொடுக்கவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.
இப்போது எல்.முருகன் மத்திய அமைச்சராக இருப்பதால், தமிழகத்தின் கோரிக்கைகள் நேரடியாக மத்திய அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். தமிழகத்துக்குத் தடுப்பூசிகளை ஒதுக்கீட்டைத் தாண்டிக் கொடுக்கிறது. தடுப்பூசி போட ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் ஆரம்பத்தில் பலரும் தயங்கினர். இதற்குப் பல தலைவர்களும் காரணமாக இருந்தனர்.
நான் ஊடகம் குறித்துப் பேசியது சர்ச்சையாகியுள்ளது. நான் புதிய தொழில்நுட்ப விதிகள் குறித்துப் பேசினேன். தமிழக, இந்திய ஊடகங்கள் மீது மிகப்பெரிய மதிப்பை பாஜக வைத்திருக்கிறது. மோடி மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்.
தலைவர் பொறுப்பை சேவகனாகக் கருதுகிறேன். இது ஒரு குடும்பக் கட்சி இல்லை. அனைவரையும் அனுசரித்துச் செயல்படுவோம். எனக்குக் குறைந்த வயது என்கின்றனர். வயது பெரிய பிரச்சினை அல்ல.
சாதாரண நிலையிலிருந்து வந்த எல்.முருகனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது மத்திய அரசு. இதுதான் சமூக நீதி. கடைக்கோடியில் இருப்பவரையும் கண்டுகொண்டு பொறுப்பு கொடுக்கிறது. எல்.முருகன், தமிழிசை ஆகியோர் அதிகமாகப் பயணம் செய்து கட்சியை வளர்த்தெடுத்துள்ளனர். அதனை நான் முன்னெடுப்பேன். கிராமங்களில் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்தவர்களைச் சந்திக்க வேண்டும் என திட்டம் உள்ளது".
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT