Published : 16 Jul 2021 03:43 PM
Last Updated : 16 Jul 2021 03:43 PM
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 16) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையின்கீழ் 13 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார். இத்துறையின்கீழ், இதுவரையில் 3,51,486 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 1,76,268 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் முதல்வரால் பெறப்பட்ட மனுக்கள், உரிய துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகின்றன. அவ்வாறு தீர்வு காணப்பட்ட மனுக்களில், தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு முதல்வரால் இதுவரை நான்கு முறை நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை 3,51,486 மனுக்களுக்கான கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றில் 1,76,268 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.
அவற்றின் விவரம்:
* வருவாய்த் துறையின் மூலம் தனிநபர் கோரிக்கைகளான பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியங்கள், இதர நலத்திட்ட உதவிகளைக் கோரி பெறப்பட்ட 52,434 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
* ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் வீடு கட்ட மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கோரி பெறப்பட்ட 35,670 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கோரி பெறப்பட்ட 6,548 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
* கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்பான 3,909 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
* தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தொடர்பான 1,889 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.
* உள்துறையின் மூலம் 1,162 மனுக்களுக்கும், இதர துறைகள்மூலம் 74,656 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் பெறப்பட்ட 2,100 மனுக்களில், 986 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு மாற்றுத்திறனாளிப் பயனாளிகள் இன்று முதல்வரிடமிருந்து நேரில் நலத்திட்ட உதவியினைப் பெற்றனர்.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை தொடங்கப்பட்ட கடந்த 70 நாட்களில், இதுவரை 1.76 லட்சம் மனுக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் முதல்வரின் தனிப் பிரிவில் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களின் ஆண்டு சராசரி எண்ணிக்கையான 1 லட்சத்து 10 ஆயிரத்தைவிடக் கூடுதலாகும். மீதமுள்ள மனுக்களுக்கும் அடுத்த 30 நாட்களில் தீர்வு காண இத்துறை முனைப்புடன் செயல்பட முதல்வர் கேட்டுக் கொண்டார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT