Published : 16 Jul 2021 02:33 PM
Last Updated : 16 Jul 2021 02:33 PM
ஏரிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூலை 16) வெளியிட்ட அறிக்கை:
"மனித நலனுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் முக்கியமானதாக விளங்கும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை திறம்பட மேலாண்மை செய்வது, அரசு உட்பட நம் ஒவ்வொருவரின் கடமை என்று சொன்னால் அது மிகையாகாது.
இதன் அடிப்படையில், மாசற்ற நீர் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புவி சுற்றுப்புறச் சூழல் கண்காணிப்புத் திட்டம் மற்றும் இந்திய தேசிய நீர்வள ஆதாரங்கள் கண்காணிப்புத் திட்டம் ஆகியவற்றின் மூலம், காவிரி, தாமிரபரணி, பாலாறு மற்றும் வகைகை ஆகிய நதிகள் மற்றும் உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, வீராணம், போரூர், பூண்டி, பழவேற்காடு உள்ளிட்ட ஏரிகளில் உள்ள நீரின் தன்மை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் கண்காணிக்கப்படுகின்றன.
இந்தச் சூழ்நிலையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் முகக்கவசம், முழு உடல் கவசம், கையுறைகள், ஊசி, மருத்துவக் கழிவுகள் போன்றவை, போரூர் ஏரியில் சட்ட விரோதமாகக் கொட்டப்படுவதாகவும், புகார் அளிக்கும்போது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அதனைத் தடுக்க நிரந்தரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும், சில நேர்வுகளில் மருத்துவக் கழிவு தெரியாதபடி குப்பைகள் கொட்டி மூடப்பட்டதாகவும், அண்மையில் போரூர் ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டபோது, அங்கு தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்ததாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.
ஏரியில் கொட்டப்படும் குப்பைகள் காரணமாக, மருத்துவக் கழிவுகள் காரணமாக, ஏரி நீர் மாசடைந்து வருவதாகவும், நிலத்தடி நீரும் மாசடைந்துவருவதாகவும், இதன் காரணமாக, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைவதாகவும், சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிளாஸ்டிக் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை தீயிட்டு எரிப்பதால், ஏற்படும் நச்சுக் காற்று காரணமாக அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் முகக்கவசம், மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், கையுறைகள், மருத்துவ உபகரணங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பஞ்சு, மனித உடல் கைழ்வுகள் என, அனைத்தையும் தனித்தனியாக பிரித்து உரிய அமைப்பிடம் கொடுக்க வேண்டியது மருத்துவமனைகளின் கடமை.
இதனை மருத்துவமனைகள் உரிய முறையில் கடைப்பிடிக்காததால்தான் இதுபோன்ற புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. போரூர் ஏரி குறித்து நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும்,சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீர் மாசினை தடுக்கும் வகையிலும், சுகாதாரக் கேடு ஏற்படுவதை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், ஏரிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டுமென்றும், மருத்துவக் கழிவுகளை தரம் பிரித்து கையாள மருத்துவமனைகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க உத்தரவிட வேண்டுமென்றும் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT