Published : 16 Jul 2021 02:23 PM
Last Updated : 16 Jul 2021 02:23 PM

எச்சில் தொட்டு பயணச்சீட்டு: அரசுப் பேருந்து நடத்துநருக்கு கட்டாய கரோனா பரிசோதனை

அரசுப் பேருந்து நடத்துநருக்கு இன்று நடந்த கரோனா பரிசோதனை

திருப்பூர்

கோவை - திருப்பூர் பேருந்தில், பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச் சீட்டு வழங்கிய அரசுப் பேருந்து நடத்துநருக்கு திருப்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில் வைத்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பரவல் குறையத் தொடங்கியதால், சமீபத்தில் அரசு கொடுத்த தளர்வில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில், சில கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து 57 பயணிகளுடன் வந்துள்ளது. பேருந்தில் நடத்துநர் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது, அனைவருக்கும் எச்சில் தொட்டு வழங்கினார்.

இதில் சிலர் அதிருப்தி அடைந்தனர். இதைப் பார்த்த பேருந்தில் பயணித்தவர்கள், கரோனா காலகட்டம் இதுபோல எச்சில் தொட்டுத் தர வேண்டாம் எனக் கூறினர். அதனைப் பொருட்படுத்தாமல் நடத்துநர் மீண்டும், மீண்டும் பயணிகளுக்கு எச்சிலால் தொட்டு சீட்டு வழங்கினார். இதுகுறித்துப் பேருந்தில் பயணித்த மாநகராட்சி சுகாதாரத்துறை இரண்டாம் நிலை அலுவலர் முருகேசன், சுண்டமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தகவல் அளித்தார். இதனைத் தொடந்து ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வந்த நடத்துநருக்கு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அரசுப் பேருந்து.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர் முருகேசன் கூறும்போது, ''தற்போது கரோனா தொற்று முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவராத நிலையில், தளர்வுகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் அரசுப் பேருந்து நடத்துநர் குணசேகரன் (47) பயணிகளுக்குத் தொடர்ந்து எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கினார். ஆட்சேபம் தெரிவித்தும் அவர் தொடர்ந்து அவ்வாறே செய்ததால், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் தெரிவித்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள கோவை பேருந்து நிறுத்தத்தில் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்களைப் பேருந்தில் சந்திக்கும் வாய்ப்பு நடத்துநருக்கு உண்டு. இதில் யாரேனும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் மூலமாக மற்றவருக்குப் பரவும் சூழ்நிலை பரவும். மீண்டும் சமூகத்தொற்றுக்கு வாய்ப்பாக மாறும் சூழ்நிலை ஏற்படும். ஆகவே மக்களைச் சந்திக்கும் பொதுத்துறையில் இருப்பவர்கள், கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே கரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x