Published : 16 Jul 2021 12:59 PM
Last Updated : 16 Jul 2021 12:59 PM

124-ஏ பிரிவு பழைய ரவுலட் சட்டத்தின் மறுபதிப்பு; காலனிய அரசின் சட்டங்கள் காலாவதியாக வேண்டும்: கி.வீரமணி

சென்னை

“124-ஏ பிரிவு மட்டுமல்ல, மற்ற பல பிரிவுகள் பழைய ரவுலட் சட்டத்தின் மறுபதிப்பு கிரிமினல் லா அமெண்மெண்ட் என்ற ‘புதிய அவதாரமாகவே’ வந்துள்ளன. மேலும் பல சட்டப் பிரிவுகளும் காலனிய அரசின் சட்டங்கள், காலாவதியாக வேண்டிய சட்டங்கள் என்று தீர்ப்புகள் வரவேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்” என்று கி.வீரமணி அறிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை:

காலாவதியாக வேண்டிய காலனியச் சட்டம் இ.பி.கோ.124-ஏ பிரிவு

''நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில்கூட இன்னமும் கூட காலனிய பிரிட்டிஷ் அந்நிய அரசால் இயற்றப்பட்ட 124-ஏ என்ற தேசத் துரோக குற்றம் சுமத்தும் சட்டம் தேவையா?'' என்ற நியாயமான, நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும் மனக் குமுறலுடன் எழுப்பும் கேள்வியை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் என்.வி.இரமணா கேட்டுள்ளார். இதுபற்றிய மத்திய அரசின் பதில் என்ன? காலாவதியாக வேண்டிய காலனியச் சட்டமான இ.பி.கோ.124-ஏ பிரிவு பெரிதும் தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அப்பாவி மக்கள் தண்டிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்து வருகிறதே

அரசுகள் தங்களை எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்க உடனடியாக இந்த சட்டப் பிரிவை ஏவி, தவறாகப் பயன்படுத்துகின்றன. நிலைமை மிக மோசமாக உள்ளது. ஒரு ஆட்சிக்கு மற்ற ஒருவர் சொல்வது பிடிக்கவில்லையானால், உடனடியாக 124-ஏ பிரிவு அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. தனி நபரும், கட்சிகளும் இயங்குவதற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நிலையை நாம் இப்போது காண்கிறோம்.

நாங்கள் குறிப்பிட்ட எந்த அரசையும், மாநிலத்தையும் குறை கூறவில்லை. ஆனால், அதே நேரத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவு சட்டம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும்கூட, எத்தனை முறை அதனை விடாப்பிடியாகப் பயன்படுத்தி அப்பாவி மக்கள் தண்டிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்து வருகிறது.

கிராமத்தில் ஒரு காவல்துறை அதிகாரி யாரையாவது தண்டிக்க விரும்பினால், உடனடியாக அவருக்கு இந்த இ.பி.கோ.124-ஏ பிரிவுதான், கண்ணை மூடிக்கொண்டு எந்தத் தயக்கமும் இன்றி பயன்படுத்தும் ஆயுதமாக உடனடியாகக் கிடைக்கும் அவல நிலை உள்ளதே.

எத்தனை எளிய மக்கள் இந்தக் கொடுமையால் சிக்கி பாதிக்கப்பட்ட நிலை உள்ளது. இதுபற்றி யாரும் கேட்பதே இல்லை. (‘‘No accountability for all this’’) என்ற நிலைதானே நாட்டில் உள்ளது’’ என்று மத்திய அரசை நோக்கி நியாயமான கேள்விகளை - நாட்டில் நிலவும் யதார்த்தமான நிலையைச் சுட்டிக்காட்டிக் கேட்டுள்ளார் நீதிபதி.

தலைமை நீதிபதியின் விளக்கம்

அதற்கு பதிலளிக்கும் வகையில், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சட்டப் பிரிவான 124-ஏ பிரிவைச் செல்லாது என்று நீதிமன்றம் கூறாமல், தவறாகப் பயன்படுத்தப்பட்டவற்றை மட்டுமே செல்லாது என்று கூறலாம்‘’ என்ற ஒரு விளக்க வேண்டுகோளை முன்வைத்துள்ளார். ஆனால், அதற்கும்கூட தலைமை நீதிபதி சில புள்ளிவிவரங்கள் மூலம் சில முக்கிய கேள்விகளையே தக்க விளக்கமாகத் தந்துள்ளார்.

2016இல் இந்த ‘‘தேசத் துரோக’’ (124-ஏ பயன்படுத்தப்பட்ட) வழக்குகளின் எண்ணிக்கை 35. 2019இல் 93 வழக்குகளாக அதிகரித்தன; அதாவது 165 சதவிகிதம் மூன்றே ஆண்டுகளில் பெருகியுள்ளது. இந்த 93 வழக்குகளில் குற்றப்பத்திரிகை போடப்பட்டுள்ளது 17 சதவிகித வழக்குகளில் மட்டுமே. அதில் தண்டிக்கப்பட்டவை மிக மிகக் குறைவான சதவிகித அளவான 3.3 சதவிகிதமே.

அரசு மீது, விமர்சனம் செய்வது என்பது எல்லாம் ‘தேசத் துரோகம்‘ என்றே குற்றம் சுமத்தப்பட்டும், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை பறிப்புக்கும் இது மிகப்பெரிய கோடரியாக உள்ளது. இந்தக் கோடரி மரத்தை வெட்டுவதற்கு பதில், காட்டையே அழித்துச் சிதைக்கும் கோடரியாகவே மாறியுள்ளது’’ என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தில்.

தேசத் துரோகக் குற்றப் பிரிவின் எல்லையை வகுக்கவேண்டிய தருணம் நெருங்கிவிட்டது

கடந்த மே மாதத்தில் மற்றொரு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதியான ஒய்.சந்திரசூட் இந்தக் தேசத் துரோக குற்றப் பிரிவின் (Sedition) எல்லையை வகுக்கவேண்டிய தருணம் நெருங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

இச்சட்டப் பிரிவு ஊடகங்களுக்கு எதிராக முண்டாதட்டி மிரட்டிடும் நிலை உள்ளது என்று நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் (மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதியும்) கருத்து தெரிவித்ததோடு, ஆந்திராவில் உள்ள டி.வி.எஸ்., ஏ.பி.என். என்ற இரண்டு தொலைக்காட்சிகள் மீதும் அவற்றின் வாயடைக்க இச்சட்டப் பிரிவு (124-ஏ) ஏவப்பட்டுள்ளது என்றும் சுட்டியுள்ளார்.

அதேபோல, மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித், துவா என்பவர் பிரதமரையும், மத்திய அரசையும் விமர்சித்தார் என்பதற்காக அவர்மீது மூர்க்கத்தனப் பாய்ச்சலுடன் இப்பிரிவின் துணையுடன் காவல்துறை எடுத்த நடவடிக்கை செல்லாது என்று தீர்ப்பளித்ததையும் நினைவுகூர்வது பொருத்தமே.

மத்திய அரசுக்கு பதிலளிக்க நோட்டீஸ்

தலைமை நீதிபதி ஆர்.வி.இரமணா தலைமையிலான அமர்வு முன்பு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கிஷோர் சந்து வாங்கே மிச்சா மற்றும் அமோடா பிராட்காஸ்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் மற்றும் முன்னாள் அமைச்சர், பத்திரிகை எழுத்தாளர் அருண்ஷோரி, கேரள சசிகுமார் போன்றோர் இந்த வழக்குகளை தனித்தனியே தொடுத்துள்ளனர். மத்திய அரசுக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சுமார் 59 ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் அளித்த கேதார்நாத் வழக்கில் 124-ஏ பிரிவு செல்லும் என்ற அளிக்கப்பட்டத் தீர்ப்பு இந்தப் புதிய வழக்குகள் மூலம் மறு ஆய்வுக்கும், புதிய பார்வைக்கும் உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காலனிய அரசின் சட்டங்கள் - காலாவதியாக வேண்டிய சட்டங்கள்

124-ஏ பிரிவு மட்டுமல்ல - மற்ற பல பிரிவுகள் - பழைய ரவுலட் சட்டத்தின் மறுபதிப்பு - கிரிமினல் லா அமெண்மெண்ட் என்ற ‘புதிய அவதாரமாகவே’ வந்துள்ளவை முதல் பல சட்டப் பிரிவுகளும் காலனிய அரசின் சட்டங்கள் - காலாவதியாக வேண்டிய சட்டங்கள் என்று தீர்ப்புகள் வரவேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

சுதந்திரக் காற்றை நாட்டு மக்கள் சுவாசிக்க விரும்புவது குடிமக்களது பறிக்கப்பட முடியாத உரிமையாகும். நம்பிக்கையோடு இருப்போமாக”.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x