Published : 16 Jul 2021 12:02 PM
Last Updated : 16 Jul 2021 12:02 PM
''குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். 3-வது அலை வராது என்று நாம் கூற முடியாது. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தற்போது 8 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி துணை ஆளுநர் மாளிகை முன்பு இன்று தொடங்கப்பட்டது.
கொசுவால் டெங்கு பரவுகிறது என்பதைக் குறிக்கும் வகையில் கொசு வேடமணிந்த ஒருவர் பேரணியில் பங்கேற்றார். துணைநிலை ஆளுநர் தமிழிசை கொடியசைத்துத் தொடங்கி வைத்து பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
புதுச்சேரியில் கரோனா தொற்றால் 16 குழந்தைகள் சிகிச்சையில் உள்ளது பற்றி அவர் கூறியதாவது:
"குழந்தைகள் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது போலத்தான் தற்போது பாதிப்பு உள்ளது. குழந்தைகளுக்கான வார்டுகள், ஆக்சிஜன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்பு இல்லாத வகையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு போன்றவை இல்லாத வகையில் அனைத்து பாதுகாப்பு சிகிச்சை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா 3-வது அலை வராது என்று நாம் கூற முடியாது. குழந்தைகள் அதிகம் தாக்கப்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்".
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT