Last Updated : 16 Jul, 2021 10:55 AM

 

Published : 16 Jul 2021 10:55 AM
Last Updated : 16 Jul 2021 10:55 AM

கரோனாவால் பாதிக்கப்படுவோரிடம் சந்தர்ப்பவாத செயலாற்றும் வண்ணப் பூஞ்சைகள்: தாவரவியல் பேராசிரியர் கருத்து

வண்ணப் பூஞ்சைகள்.

புதுக்கோட்டை

கரோனாவால் பாதிக்கப்படுவோரிடம் வண்ணப் பூஞ்சைகள் சந்தர்ப்பவாத செயலாற்றி, பாதிப்பை அதிகரிக்கச் செய்து வருவதாக, தாவரவியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி வந்துவிட்டாலே வண்ண மத்தாப்புகள் நம் நினைவுக்கு வரும். இதேபோன்று, கரோனா 2-வது அலையின்போது பாதிப்புக்குள்ளாகியவர்களில் பலரும் வண்ணப் பூஞ்சை நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், 3-வது அலை வந்தால், அப்போது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது என்ற அச்சமும் பொதுமக்களிடையே உள்ளது.

இத்தகைய வண்ணப் பூஞ்சைகளின் பாதிப்புகள் குறித்து, ஓய்வுபெற்ற அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வரும், தாவரவியல் துறை பேராசிரியருமான புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.பழனியப்பன், 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியதாவது:

"கரோனா காலத்தில் பல வண்ணப் பூஞ்சைகள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதிலென்ன விநோதம் என்றால், இப்பூஞ்சைகள் யாவும் இயல்பான வண்ண உடல்களைக் கொண்டவை அல்ல.

மாறாக, இவை மனித உடலில் தொற்றை ஏற்படுத்திய பின்னர் வெளிப்படுத்தும் நச்சு விளைபொருட்கள் அல்லது தொற்று ஏற்பட்ட மனித உடலில் தோன்றும் குறிப்பிட்ட நிறமாற்றத்தைக் கொண்டு இவை கருப்புப் பூஞ்சைகள், வெள்ளைப் பூஞ்சைகள் மற்றும் மஞ்சள் பூஞ்சைகள் என அழைக்கப்படுகின்றன.

இயல்பான மனிதர்கள் இப்பூஞ்சைகளால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தாவரவியல் பேராசிரியர் எஸ்.பழனியப்பன்

கருப்புப் பூஞ்சை:

மியூகோர் மைகோசிஸ் எனப்படும் இந்நோயானது, சுவாசிக்கும் காற்றின் மூலம் உட்புகும் பூஞ்சைகள், சைனஸ் எனப்படும் முக உட்புழைகளில் வளர்ந்து, பின்னர் மூளை வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மனித உடல் உறுப்புகளில் உள்ள செல்களின் இறப்பால் அல்லது நைய்வுப் புண்களால் தோன்றும் கருமை நிறத்தினால் கருப்புப் பூஞ்சையாகிறது.

நோய் தீவிரமடையும்போது கண்கள் பாதிக்கப்படுவதுடன், அறுவை சிகிச்சை மூலம் கண்களை அகற்றும் நிலையும் ஏற்படுகிறது.

வெள்ளைப் பூஞ்சை:

வெள்ளைப் பூஞ்சையானது காண்டிடா என்ற ஈஸ்ட் வகையைச் சேர்ந்த பூஞ்சையாகும். இது, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கக்கூடியது.

இதில், ஆல்பிகன்ஸ் என்பது வெண்மை என்ற பொருள் உணர்த்தும் லத்தீன் மொழி சொல்லாகும். இந்நோயானது வாய்க் குழியில் உள்ள மியூக்கஸ் சவ்வில் வெள்ளை நிறத் திட்டுகள் தோன்றுவது இந்நோய்க்கான அறிகுறியாகும்.

தொடக்கத்தில், வாய் முதல் குடல் வரை உள்ள உணவுப் பாதைகளில் வெண் திட்டுகள் தோன்றுவதுடன், நோய் தீவிரமடையும்போது உடலின் தோல் பரப்புகளிலும் தோன்றுகின்றன.

மஞ்சள் பூஞ்சை:

பாக்டீரியத் தொற்றினால் புரையோடிய புண்களில் சீழ் கட்டும்போது, உருவாகும் சீழில் வளரும் பூஞ்சைகளானது, சீழிற்கு மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துவதால் மஞ்சள் பூஞ்சைகளாகின்றன.

இந்நோயின் காரணியாக இருப்பது ஆஸ்பெர்ஜில்லஸ் ஃபிளேவஸ் என்ற பூஞ்சை இனமாகும். இதில், ஃபிளேவஸ் என்பது மஞ்சள் என்ற பொருள் உணர்த்தும் லத்தீன் மொழி சொல்லாகும்.

பாதிக்கப்பட்டோரின் உடல் சோர்வடைதல், மெலிந்துபோதல் ஆகியவை இப்பூஞ்சை தொற்றின் ஆரம்பக் கால அறிகுறிகளாகும். ஆரம்பக் காலத்திலேயே இப்பூஞ்சை மனித உடலில் இனமறியப்படாவிட்டால் உறுப்புகளில் செயல் இழப்பு போன்ற அபாயகர விளைவுகள் ஏற்படலாம்.

இயல்பாக அழுகிய பொருட்களில் வாழும் தன்மை உடைய இத்தகைய பூஞ்சைகளானது, கரோனாவால் பாதிப்பட்டோரின் உடலை அடைந்ததும் அங்கு வாழ்வதற்கு ஏற்பத் தன்னை ஒட்டுண்ணிகளாக மாற்றிக் கொள்வதால் இவற்றை சந்தர்ப்பவாத பூஞ்சை என அழைக்கப்படுகிறது. இந்த 3 வகையான வண்ணப் பூஞ்சைகள் தவிர, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பச்சைப் பூஞ்சை என்ற புதிய பூஞ்சை அறியப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை".

இவ்வாறு எஸ்.பழனியப்பன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x