Published : 10 Feb 2016 08:25 PM
Last Updated : 10 Feb 2016 08:25 PM
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் தேர்தலில் எந்தக் கட்சியுடன் யார் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்பதுதான் விடை காண முடியாத கேள்வியாக இருக்கிறது.
இந்த தருணத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதா என்பதை அலசிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஏன் என்று தெரிந்து கொள்ள அரசியல் சக்கரத்தை சுழற்றிப் பார்க்கலாம்.
1991, 2001 மற்றும் 2011-ம் ஆண்டில் அதிமுகவும், 1996 மர்றும் 2006-ம் ஆண்டில் திமுக வும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துள்ளன. ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது ஐந்தாண்டு கழித்து அந்தக் கட்சியின் மீது அதிருப்தி ஏற்படுவதும், ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் எதிர்க் கட்சி பக்கம் வந்து கூட்டணி அமைத்து ஜெயிப்பதும் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழக அரசியலில் நடந்து வருகிறது.
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் தலைமையில் மட்டுமே ஆட்சி அமைந்துள்ளது. எப்போதும் இந்தக் கூட்டணி அரசியலில் வாக்கு வங்கி வித்தியாசத்தை உருவாக்கி வெற்றி வாய்ப்பை உருவாக்கும் அணியாக காங்கிரஸ் கட்சி இருந்து வந்துள்ளது.
1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு திராவிட கட்சிகளுடன் சட்டமன்ற , பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து அதன் வெற்றியையும் தீர்மானித்து வந்துள்ளது.
இந்திராகாந்தி இந்த பார்முலாவை பயன்படுத்தி தெளிவாக காங்கிரஸ் மவுசு குறையாமல் பார்த்து கொண்டார். இந்திராவுக்கு பிறகு ராஜிவ் அதை கடைபிடிக்க அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் பலமாக இருந்தது.
1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிமுக கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றது. ராஜிவ் மறைவுக்குப் பின்னர் அது முடிவுக்கு வந்தாலும் 1996 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸின் பெரும்பகுதி தமாகாவாக உருவெடுத்து திமுகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம் திமுக கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றது.
2001 ஆம் ஆண்டு தமாகா - அதிமுக கூட்டணி இணைந்து வெற்றி பெற்றனர். மூப்பனார் மறைவுக்குப் பின்னர் தமாகா காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. காங்கிரஸ் திமுக கூட்டணி உருவாக, அதிமுக தனித்து போட்டியிட்டது. அதே தருணத்தில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக கணிசமான எண்ணிக்கையில் வாக்குகளை பிரிக்க, அதிமுக தோல்வியை தழுவியது. அதன் பின்னர் காங்கிரஸ் பின்னுக்கு தள்ளப்பட்டு தேமுதிக வாக்கு சதவீதத்தை நிர்ணயிக்கும் கட்சியாக மாறியது.
இதைப் புரிந்துகொண்ட ஜெயலலிதா கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தார். உடன் இடதுசாரிகள் இணைய மெகா கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. கடந்த முறை திமுகவை வற்புறுத்தி அதிக இடங்களை பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் ஐந்து இடங்களை மட்டுமே பெற்றது. அதன் பிறகு ஜி.கே . வாசன் வெளியேறி மீண்டும் தமாகா துவங்க காங்கிரஸ் கட்சி இந்த சட்டமன்ற தேர்தலில் பெறப்போகும் வாக்குகள் தான் எது உண்மையான காங்கிரஸ் என்பது தெளிவாகும் என்ற நிலையில் காங்கிரஸ் உள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க வேண்டும். மறுபுறம் கிட்டத்தட்ட திமுகவும் சரியான கூட்டணி அமைத்து வெற்றி பெறவேண்டிய முனைப்பில் உள்ளது. ஆனால், கடந்த 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசியல் சூழலே தலைகீழாக மாறியுள்ள நிலை தற்போது உள்ளது. மக்கள் நலக்கூட்டணி என மூன்றாவது அணியில் இடதுசாரிகள் , மதிமுக, விசிக கூட்டணி அமைந்துள்ளது. பாமக தனித்து நிற்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில்அதிமுகவை வீழ்த்த தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் திமுக களம் இறங்கியுள்ளது.
இடையில் காங்கிரஸ் பல்டியடித்து தனித்து போட்டி என்றது . ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒருபடி மேலே சென்று காங்கிரஸ் வென்றால் ராகுல்காந்தி தான் தமிழக முதல்வர் என்று பேட்டியளித்தார். காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றார். இந்நிலையில் தனது நிலையிலிருந்து அப்படியே யூடர்ன் அடித்துள்ள காங்கிரஸ் பேச்சு வார்த்தைக்கு இறங்கி வருகிறது. கோவையில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், குலாம் நபி ஆசாத் வரும் பிப்ரவரி 13 சென்னை வர உள்ளதாகவும் அப்போது திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் காங்கிரஸ் சற்று இறங்கி வந்துள்ளது. பாண்டிச்சேரியில் தொடர்ந்து 25 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ வல்சராஜுக்கு பாராட்டுவிழா நடக்கிறது. அதில் கலந்துகொள்ள மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் மற்றும் ஆசாத் வருகின்றனர். மறுநாள் பிப்.13 சென்னை வரும் அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணி குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் திமுக தரப்பில் விசாரித்த போது முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில் அதுபோன்று எந்த ஏற்பாடும் திமுக தரப்பில் இல்லை. தற்போது தேமுதிக கூட்டணி முடிவான பின்னர் தான் மற்ற முயற்சிகள் எல்லாம் என்று தெரிவித்தார். ஆகவே, மேலிட தலைவர்களே வந்தாலும் பிப் 13 பேச்சுவார்த்தை நடக்குமா என்பது கேள்விக்குறியே .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT