Published : 15 Jul 2021 08:13 PM
Last Updated : 15 Jul 2021 08:13 PM
புதுச்சேரியில் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நிமிடம் கவனமாகவும், எச்சரிக்கையாடும் இருக்க வேண்டும். முழுமையான தகவல் அடங்கிய ஆய்வறிக்கையை அளிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் தொடர் முயற்சியாக 20-வது வாராந்திர கரோனா மேலாண்மை சீராய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 15) நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்துக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
தலைமைச் செயலர் அஸ்வனி குமார், போலீஸ் டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா, வருவாய்த்துறைச் செயலர் அஷோக்குமார், உள்ளாட்சித் துறைச் செயலர் வல்லவன், செய்தித்துறைச் செயலர் உதய்குமார், சுகாதாரத்துறைச் செயலர் அருண், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சவுதரி, சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், தேசிய சுகாதார இயக்கத் திட்ட இயக்குநர் ஸ்ரீராமலு, மாநில கரோனா மேலாண்மைப் பொறுப்பு அதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி சாயிராபானு மற்றும் ஜிப்மர், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அதிகாரிகள், பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சுகாதாரத்துறை இயக்குநர் புதுச்சேரியில் கரோனா நிலவரம், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், கருப்புப் பூஞ்சை நோய், தடுப்பூசி குறித்துப் படக்காட்சி மூலம் விளக்கினார்.
தொடர்ந்து கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியதாவது:
‘‘புதுச்சேரியில் 21 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் கவனமாகவும், எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும்.
குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்படுவது குறித்த முழுமையான தகவல் அடங்கிய ஆய்வறிக்கையை அளிக்க வேண்டும். சூழ்நிலையைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். ஒருவேளை குழந்தைகளைத் தாக்கினால் எதிர்கொள்வதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கெனவே செய்யப்பட்டிருப்பது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுகிறது.
கரோனா கட்டுக்குள் இருந்தாலும் எந்த நேரத்திலும் மூன்றாவது அலை தாக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும். தடுப்பூசியால் புதுச்சேரி வேகமாக முன்னேறி வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தீவிரமாகத் தடுப்பூசி செலுத்துவதை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகளை வெளியில் கூட்டிச் செல்வதும், உறவினர்களை வீட்டிற்கு அழைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்துக் குழந்தை நல மருத்துவர்களும், பொதுநல மருத்துவர்களும், குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படுகிறதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பான சிகிச்சைகள் அவர்களை அபாயக் கட்டத்தில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. அனைவரும் இணைந்து கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக இயங்க வேண்டும். பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன என்பதையும் முழு கவனத்தில் கொண்டு எப்பொழுதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் நடைபெறும் சீராய்வுக் கூட்டம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கவும், அவற்றை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெறவும் பெரிதும் உதவியாக இருக்கிறது.’’
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT