Published : 15 Jul 2021 07:54 PM
Last Updated : 15 Jul 2021 07:54 PM
நீட் தேர்வை ரத்து செய்யும் நிலைப்பாட்டில் திமுகவைப் போலவே அதிமுகவும் அதே எண்ணத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்தபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இன்னும் 2 மாதம் நீட் தேர்வு எழுதும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். நிலையற்ற தன்மையில் மாணவர்கள் உள்ளனரா?
மாணவர்கள் குழப்பத்தில் இல்லை. என்னவென்றால் மாணவர்கள் நீட் தேர்வுக்கான பயிற்சியை நிறுத்தவில்லை. அரசுத் தரப்பில் தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வந்தாலும் மாணவர்கள் அவர்கள் பயிற்சியை விடவேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் பயிற்சி தொடர்கிறது. 100% உண்மையான தெளிவான மனநிலையோடு அரசு உழைத்துக்கொண்டு இருக்கிறது.
அரசின் முயற்சிகள் பலனளித்து கிடைத்தால் நல்ல விஷயம். ஒருவேளை கிடைக்காவிட்டாலும் இந்த ஆண்டு மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டி இருக்கும். ஆனாலும், முதல்வர் சொன்னது அடுத்தடுத்த ஆண்டுகளில் எப்படியாவது முயற்சி எடுத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையாக ரத்து செய்யப் பாடுபடுவோம் என்று சொல்லியிருக்கிறார். அந்த வகையில் மாணவர்களைப் பொறுத்தவரை பயிற்சிக்காகப் படிப்பதில் தவறில்லை என்றுதான் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
வேறு ஏதாவது வழி இருக்கிறதா?
கூடுதல் வலு சேர்க்கும் விஷயம்தான். வெறுமனே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது குடியரசுத் தலைவரால் மறுக்கப்பட்டு அது உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால், 2006களில் இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளிலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற அப்போதைய முதல்வர் கருணாநிதி, அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று, அதிலிருந்து நீதிமன்றம் சென்று மாணவர்களை நுழைவுத் தேர்வுகளிலிருந்து காப்பாற்றினார்.
அந்த வகையில்தான் முதல்வர் ஸ்டாலின், நீதிபதி தலைமையில் குழு அமைத்து அறிக்கை பெற்றுள்ளார். என்னவெல்லாம் செய்வது என்பது குறித்து நேற்று காலையிலிருந்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று வருகிறார். மாணவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசு தீர்க்கமான முடிவில் உள்ளது. திமுகவைப் பொறுத்தவரை நீட்டிலிருந்து விலக்களிக்கப் பெறுவது என்பதில் உறுதியாக உள்ளது.
மத்திய அமைச்சரும் முடியாது என்று எங்கும் சொல்லாதது திருப்தியாக உள்ளது. அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், நான் உட்படப் பல விஷயங்களை எடுத்துச் சொன்னோம். மத்திய கல்வி அமைச்சருக்குத் தமிழகத்தில் உள்ள சூழல் தெரிகிறது. திமுக மட்டுமல்ல அதிமுகவின் நிலையும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதுதான் என்பதையும் மத்திய அமைச்சர் எங்களிடம் சொன்னார்”.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT