Published : 15 Jul 2021 06:50 PM
Last Updated : 15 Jul 2021 06:50 PM
புதுச்சேரியில் 16 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
கரோனா தடுப்பு வழிமுறைகளான தனிமனித விலகல், முகக்கவசம், தடுப்பூசி செலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக 3-வது அலை குழந்தைகளை அதிக அளவில் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குழந்தைகளுக்காக இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் வைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், புதுச்சேரியை நூறு சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்றவும், கரோனா மூன்றாம் அலையைத் தடுப்பதற்காகவும் சுகாதாரத்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 21 குழந்தைகளுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், 16 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 4 குழந்தைகளும் அடங்குவர்.
இதேபோல, கரோனா உறுதி செய்யப்பட்ட தாய்மார்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பச்சிளங் குழந்தைகளுக்குப் பரிசோதனை செய்ததில், ஒரு குழந்தைக்கு கரோனா தொற்று இல்லை. மீதமுள்ள 4 குழந்தைகளுக்கு முடிவு தெரிய வேண்டியுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி பிரத்யேக கரோனா குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், தங்களது குழந்தைகளுக்கு கரோனா பரவலைத் தடுக்க முடியும். மேலும், கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதால் கரோனா 3-வது அலை பரவலைத் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT