Published : 15 Jul 2021 04:56 PM
Last Updated : 15 Jul 2021 04:56 PM

மத்திய அமைச்சர்களுடன் 13 அம்சக் கோரிக்கைகள் குறித்த பேச்சு திருப்தியாக இருந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி 

சென்னை

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்தியக் கல்வி அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இருவரையும் சந்தித்து தமிழகம் சார்பாக உள்ள 13 கோரிக்கைகளை அளித்துப் பேசினார். அமைச்சர் முழுமையாகத் தமிழகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டார் பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

“நீட் தேர்வு விவகாரத்தில் மாணவ, மாணவிகள் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொன்னோம். அதேபோன்று நீட் தேர்வில் உள்ள பாடப்பிரிவுகளில் மாநில, சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் உள்ள நிலை குறித்து எடுத்துச் சொன்னபோது அவரும் இது சம்பந்தமாகப் பரிசீலிப்பதாகச் சொன்னார்.

பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதங்கள், நேரில் சந்தித்தபோது வைத்த கோரிக்கைகள், அளித்த மனு போன்ற விவரங்களைக் கல்வி அமைச்சரிடம் அளித்தோம். அதேபோல் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையையும், அதன் பரிந்துரைகள் பற்றியும் பேசினோம்.

அதேபோன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவையும் சந்தித்துப் பேசினோம். அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கு 6 கோடி பேர் உள்ளனர். இரண்டு டோஸ் என்கிற முறையில் 12 கோடி டோஸ் தேவைப்படுகிறது. தற்போது வரை வந்துள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியே 70 லட்சத்து 38,460. இன்று காலை 91,580 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன.

இந்த விவரங்களை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி தமிழகத்துக்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில் மாதந்தோறும் ஒதுக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை போதவில்லை என்றும், தமிழக மக்கள் பெரிதளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்கிற செய்தியைச் சொல்லி, கூடுதலான அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கக் கோரிக்கை வைத்தோம்.

தமிழக முதல்வர் 2 நாட்களுக்கு முன் எழுதியபடி கூடுதலாகச் சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி டோஸ் அளவிற்குத் தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதைக் கேட்டுக்கொண்ட அமைச்சர் நிச்சயம் தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வோம் என்று சொன்னார்.

கடந்த காலத்தில் 6 லட்சம் வரை தடுப்பூசிகள் வீணாயின. தற்போது அந்த வீணான அளவையும் சேர்த்து அதிக அளவில் வந்தது 1 கோடியே 70 லட்சம் இதுவரை போடப்பட்டது 1 கோடியே 71 லட்சம் என்று சொன்னோம். இதைக் கேட்டு மத்திய அமைச்சர் மகிழ்ச்சி அடைந்தார்.

அதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க கேட்டுக் கொண்டோம். அவரும் மிக விரைவில் தொடங்குவதற்காக நடவடிக்கை எடுப்பதாக ஒப்புக்கொண்டார்.

அதேபோல் 11 மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானம் குறித்த விவரங்களை அளித்தோம். அதைப் பார்த்து உடனடியாக ஆய்வு செய்து ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்கிற அடிப்படையில் 1,650 மாணவர்களைச் சேர்க்கலாம் என்று சொன்னோம். அதனால் ஆய்வுக்கு ஆட்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்தக் கேட்டுக்கொண்டோம். ஆட்களை ஆய்வுக்கு அனுப்புவதாகத் தெரிவித்தார்.

அதேபோன்று கோவை எய்ம்ஸ் பற்றிக் கோரிக்கை வைத்தோம். கோவைக்கும், மதுரைக்கும் எவ்வளவு தூர இடைவெளி என்று கேட்டார். 300 கி.மீ. என்றோம். அதையும் பரிசீலிப்பதாகச் சொன்னார்.

அதேபோன்று அனைத்திந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரினோம். அதற்கும் ஒப்புக் கொண்டார். அதேபோன்று கரும்பூஞ்சை நோய்க்குத் தேவையான மருந்துகளை கூடுதலாக அனுப்பக் கோரினோம். நாளையே கூடுதல் மருந்துகளை அனுப்புவதாகச் சொன்னார்.

அதேபோன்று செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி மருந்து மையத்தை இயங்க வைத்தால் நாமே தடுப்பூசி தயாரிக்க முடியும் என்று சொன்னோம். அதற்கான கட்டமைப்பு சிறப்பாக உள்ளது என்பதை முதல்வர் தெரிவிக்கச் சொன்னதாகக் குறிப்பிட்டோம். அதற்கு அவர் அதுகுறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார்.

அதோடு மட்டும் அல்லாமல் கரோனா 2ஆம் அலை பாதிப்புகளுக்கான புனரமைப்புக்கும் 3ஆம் அலையை எதிர்கொள்ளத் தேவையான தயார் நிலைகளைச் செய்வதற்கும் நிதி தேவை என்கிற நிலையில் ஹெல்த் மிஷன் சார்பில் அளிக்கப்பட்ட திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தோம். அதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அதில் முதற்கட்டமாக ரூ.800 கோடியை முதற்கட்டமாக விடுவிக்கிறேன். அதன் பின்னர் அதை நீங்கள் செலவழித்தபின் அடுத்தடுத்து நீங்கள் அளிக்கும் திட்ட மதிப்பீடுகளை அளிப்பதை அடுத்துப் பணத்தை விடுவிக்கிறோம் என்று கூறினார்”.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x