Published : 15 Jul 2021 04:28 PM
Last Updated : 15 Jul 2021 04:28 PM
மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிக் கூட்டமும், சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
"காரைக்கால் கடைமடைப் பகுதி விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. தற்போது தமிழக எல்லையில் 67 டிஎம்சி அளவில் தண்ணீர் தேக்கும் திட்டத்தை கர்நாடகா அரசு தொடங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே புதுவைக்கு 7 டிஎம்சி கொடுக்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த ஏற்கெனவே பல சிக்கல்கள் உள்ளன. இந்தச் சிக்கலை இன்னும் அதிகப்படியாக்குவது போல கர்நாடகம் அணை கட்டுவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூட்டம் நடத்தி, கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் எனப் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், நீர்ப்பாசன அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி நடுவர் தீர்ப்பாயத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மாற்றும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. சாதாரண மழை இல்லாத காலத்தில் காரைக்காலுக்கு 7 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என காவிரி நடுவர் தீர்ப்பாயத்தில் உத்தரவாதம் உள்ளது. ஆனால், அணை கட்டுவது மூலமாக 7 டிஎம்சி தண்ணீர் கொடுப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். சட்டபூர்வமாகத் தீர்ப்பு கொடுத்த பிறகு அதனை மாற்றும் முயற்சியாகத்தான் இது உள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும் மாற்றுவதுபோல இது உள்ளது. அதனை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. புதுவை அரசு காரைக்கால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பறிக்கும் முயற்சியைத் தடுக்க முதல்வர் தயாராக உள்ளார். நிர்வாக ரீதியாக தற்போது கடிதம் எழுதி, தடுக்க முயன்று வருகிறோம். தேவைப்பட்டால், அனைத்துக் கட்சிக் கூட்டமும், சட்டரீதியான நடவடிக்கையையும் முதல்வர் எடுப்பார். அதேபோல் தமிழகத்தோடு இணைந்து செயல்படுவது குறித்து அந்த நேரத்திற்குத் தகுந்ததுபோல முடிவெடுக்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT