Published : 15 Jul 2021 03:49 PM
Last Updated : 15 Jul 2021 03:49 PM
தமிழக பாஜக இருப்பது தமிழக மக்களுக்காகவும், தமிழ்நாட்டு விவசாயிகளுக்காகவும்தான் என்று அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள கு.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக தமிழகத் தலைவராக கு.அண்ணாமலை சென்னையில் நாளை பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், சென்னை செல்லும் வழியில் இன்று திருச்சி வந்த அவர், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, சிந்தாமணி அண்ணா சிலைப் பகுதியில் பாஜகவினர் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தமிழ்நாட்டுக்கு எதற்காக நீட் தேர்வு வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு எந்த வகையில் நீட் தேர்வு நல்லது, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் எந்த அடிப்படையில் புள்ளிவிவரத்தைத் தயாரித்து அளித்துள்ளனர் என்றெல்லாம் நாளை சென்னையில் பதில் அளிக்கப்படும்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு உறுதுணையாக தமிழக பாஜக இருக்கும். இதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்காக, விவசாயிகளுக்காகவே இந்த ஆதரவை அளித்துள்ளோம். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவினர் டெல்லியில் பிரதமரைச் சந்திக்கும்போது பாஜக பிரதிநிதிகளும் உடன் செல்வார்கள். நாங்களும் வலியுறுத்துவோம்.
ஏனெனில், தமிழக பாஜக இருப்பது தமிழக மக்களுக்காகவும், தமிழ்நாட்டு விவசாயிகளுக்காகவும்தான். அதில், எள்ளளவும் பின்வாங்க மாட்டோம். கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், எங்களது நிலைப்பாடு தமிழக விவசாயிகளுக்காகத்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
கொங்குநாடு விவகாரத்தை ஊடகங்கள்தான் பேசுகின்றன. இதுகுறித்தும் சென்னை செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்படும். நாட்டில் எந்தச் சட்டம் இயற்றப்பட்டாலும் அது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று வேண்டாத அரசியல் செய்பவர்கள் கிளப்பிவிடுகின்றனர். குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அதேபோல், பொது சிவில் சட்டமும் எந்த வகையிலும், யாருக்கும் எதிரான சட்டம் கிடையாது. ஆனால், முஸ்லிம்களைச் சூழ்ச்சி செய்து, பிரித்து அரசியல் செய்யும் கட்சிகள் பாதிப்பு என்று கூறுவது வாடிக்கையாகிவிட்டது.
தமிழ்நாட்டுக்கு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்துள்ளது. ஆனால், கரோனா தடுப்பூசி மையங்களில் 70 சதவீத டோக்கன்களை திமுக கரைவேட்டி அணிந்தவர்கள் வாங்கிச் சென்று, தங்களுக்கு வாக்களித்தவர்கள்- வாக்கு அளிக்காதவர்கள் என்று பிரித்துக் கொடுக்கின்றனர். பொதுமக்களுக்கு 30 சதவீத டோக்கன் மட்டுமே கிடைக்கிறது. இதனால்தான் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நேரிடுகிறது. இதை மறைப்பதற்காக எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது குறை கூறுவது நியாயமற்றது''.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜகவினர் மீது வழக்கு
இந்த நிலையில், கரோனா காலத்தில் சமூக இடைவெளியின்றித் திரளானோர் கூடியது, பொது இடத்தில் வெடி வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாஜகவினர் 10-க்கும் அதிகமானோர் மீது கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT