Published : 15 Jul 2021 03:11 PM
Last Updated : 15 Jul 2021 03:11 PM
மெரினா கடற்கரையைச் சுத்தமாகப் பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக் கூடாது எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்கக் கோரி வேலுமணி என்பவர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது உலகின் பெரிய கடற்கரையான மெரினாவை முறையாகப் பராமரிப்பதில்லை என்றும், அதைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை என்றும் தெரிவித்தனர். அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முறையாகப் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியின் மண்டல அதிகாரியையும், சென்னை மாநகர காவல் ஆணையரையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து, சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அதன்படி மெரினா கடற்கரையில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறதா? தினமும் எவ்வளவு குப்பைகள், எவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன? மெரினா கடற்கரையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் கழிப்பறைகள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் எத்தனை அமைக்கப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், கடற்கரை பராமரிப்பிற்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது? கடை உரிமையாளர்களிடம் இருந்து எவ்வளவு வாடகை வசூலிக்கப்படுகிறது? குற்றங்கள் நடக்காத வகையில் இரவு 10 மணிக்குப் பிறகும் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா? மெரினா லூப் சாலை அருகிலேயே மீனவர்களுக்கான மீன் அங்காடியை ஏன் அமைக்கக் கூடாது எனவும் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
மெரினாவின் அழகைப் பாதுகாக்க மாநகராட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எனவும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர். மெரினா கடற்கரையைச் சுத்தமாகப் பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு பொதுப்பணித் துறை, காவல்துறை, சுற்றுச்சூழல், சமுக ஆர்வலர்கள், வியாபாரிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவைத் தமிழக அரசு ஏன் அமைக்கக் கூடாது? என விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT