Last Updated : 15 Jul, 2021 01:38 PM

 

Published : 15 Jul 2021 01:38 PM
Last Updated : 15 Jul 2021 01:38 PM

பொறியியல் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுபோல் நீட் தேர்வு தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது தந்தை நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார் திருமாவளவன்.

அரியலூர்

நீட் தேர்வு வேண்டாம் என்ற தடைச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில் தனது தந்தையின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று (ஜூலை 15) மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து தொல் திருமாவளவன் பேசும்போது, ''நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஏ.கே.ராஜன் குழு, தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. அதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொறியியல் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் எனக் கடந்த திமுக ஆட்சியில் தடைச் சட்டம் கொண்டுவந்து, நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுபோல் நீட் தேர்விற்கும் தடைச் சட்டம் கொண்டுவந்து நீட் தேர்வை ரத்து செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது தந்தை உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளைத் திறப்பது என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பள்ளிகள் திறக்கும் எண்ணத்தைத் தமிழக அரசு ஒத்திவைக்க வேண்டும்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் எண்ணத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்கும் என நினைக்கிறோம். நாளை அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்க உள்ளோம்'' என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x