Published : 15 Jul 2021 12:33 PM
Last Updated : 15 Jul 2021 12:33 PM

கொங்கு நாடு விவகாரம்; முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்: ஜெயக்குமார் பேட்டி

ஜெயக்குமார்: கோப்புப்படம்

சென்னை

முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் என, கொங்கு நாடு விவகாரம் குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு, பாஜகவைச் சேர்ந்த சிலர் கொங்கு மண்டலத்தைக் கொங்கு நாடு என, தமிழகத்திடமிருந்து தனியாகப் பிரிக்க வேண்டும் எனப் பேசி வருகின்றனர். இதற்கு, திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக சார்பாக, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஜெயக்குமார், இன்று (ஜூலை 15) சென்னை, தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கொங்குநாடு விவகாரம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "அத்தைக்கு மீசை முளைக்கட்டும். மற்ற விஷயங்களைப் பிறகு பார்க்கலாம்" என்றார்.

மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "காவிரி நதிநீர் என்பது ஜீவாதார உரிமை. டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன். ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலன் என்ற வகையில், அதனை நிலைநாட்ட வேண்டும் என்பதனால்தான், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கடந்த காலங்களில் போராடி, வாதாடி, அந்த உரிமையை நிலைநாட்டினர். எந்த நிலையிலும் நம் உரிமை பறிபோய்விடக் கூடாது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இன்று டெல்லி செல்கின்றனர். நாளை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரைச் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்துவோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x