Published : 15 Jul 2021 11:58 AM
Last Updated : 15 Jul 2021 11:58 AM

நூற்றாண்டு காணும் தோழர் சங்கரய்யா நல்ல உடல் நலனுடன் மக்கள் பணியாற்ற வேண்டும்: ராமதாஸ் வாழ்த்து

சென்னை

“தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைப்பிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அதை இளைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் வகையில் தோழர் சங்கரய்யாவின் நூற்றாண்டு வடிவமைக்கப்பட வேண்டும்” என ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சங்கரய்யாவின் நூறாவது பிறந்த நாளை ஒட்டி இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், அக்கட்சியின் தமிழ் மாநில முன்னாள் செயலாளருமான சங்கரய்யா இன்று ஜூலை 15ஆம் தேதி நூறாவது அகவையை எட்டுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனுக்காகப் பாடுபடுபவர்களுக்கு வயது என்பது ஓர் எண்தான். அது சங்கரய்யாவுக்கும் பொருந்தும். அகவை நூறை அவர் எட்டினாலும் அவரது மக்கள் நலப் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இந்த வயதிலும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உட்படப் பல தளங்களில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் இன்றும் இளைஞராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தோழர் சங்கரய்யாவின் பொது வாழ்க்கை 9 வயதில் தொடங்கியது. விடுதலைப் போராட்டத்தில் தீவிரம் காட்டி வந்த பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் வெடித்த போராட்டத்தில் 9 வயதுச் சிறுவனாக சங்கரய்யாவும் கலந்து கொண்டார். அதன்பின் 90 ஆண்டுகளுக்கு மேலாகியும் சங்கரய்யாவின் போராட்ட வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1938ஆம் ஆண்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம், பின்னர் வெள்ளையனே வெளியேறு போராட்டம், பொதுவுடைமை இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காலம் எனப் பல காலகட்டங்களில் அவர் சிறை வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார். சென்னை மாகாணத்தின் பெரும்பாலான சிறைகளில் தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை கழிந்திருக்கிறது. அரசியலில் தோழர் சங்கரய்யாவைப் போன்ற தூய்மையான மனிதர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக தோழர் சங்கரய்யா பணியாற்றிய 7 ஆண்டுகளில் அக்கட்சி ஏராளமான போராட்டங்களை நடத்தியது. அப்போராட்டங்களை முன்னின்று நடத்திய தோழர் சங்கரய்யாவின் துணிச்சலும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் தன்மையும் சில அரசியல் தலைவர்களுக்கு எரிச்சலூட்டியதும் உண்டு.

2001 சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதற்கும் முன்பும், பின்பும் தோழர் சங்கரய்யாவுடனும் நானும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல அறிமுகமும், ஒருவர் மீது மற்றொருவருக்கு மரியாதையும் உண்டு. அது என்றும் தொடரும்.

தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைப்பிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அதை இளைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் வகையில் தோழர் சங்கரய்யாவின் நூற்றாண்டு வடிவமைக்கப்பட வேண்டும். நூற்றாண்டைக் காணும் தோழர் சங்கரய்யா இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”

இவ்வாறு ராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x