Published : 15 Jul 2021 11:44 AM
Last Updated : 15 Jul 2021 11:44 AM
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அண்மையில், 9, 10, 11,12ஆம் வகுப்புகள் நடத்த, 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பால் அதற்கான நடைமுறைகளைக் கல்வித்துறை மூலம் கலந்து ஆலோசித்து வெளியிடுவோம் என்று அமைச்சர் நமச்சிவாயமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கான வகுப்பறையைத் தயார் செய்தும் வருகின்றனர்.
வரும் வெள்ளியன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அனைத்துப் பள்ளிகளும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கல்லூரிகளிலும் பணிகள் நடக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், வழிகாட்டு நெறிமுறைகளைக் கல்வித்துறை ஏதும் பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. இன்று காலை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் தமிழிசையை அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்தார்.
இதையடுத்துக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், ”பள்ளி-கல்லூரி திறப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். நோய்த்தொற்று முழுமையாகக் குறையவில்லை. பள்ளிகள் திறப்பை மறுபரீசிலனை செய்யக் கோரிக்கை வந்தது. முதல்வர், ஆளுநர் உடன் பேசிய பிறகு தள்ளிவைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. எந்தத் தேதி என பிறகு அறிவிக்கப்படும். இப்போதைக்கு பள்ளி- கல்லூரி திறப்பு இல்லை. தேதியோ, மாதமோ குறிப்பிட இயலாது” என்று தெரிவித்தார்.
கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் வழியே தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தரிடமும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT