Published : 06 Jun 2014 10:15 AM
Last Updated : 06 Jun 2014 10:15 AM

தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு டிஜிட்டல் உரிமம் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தில் டிஜிட்டல் முறையி லான கேபிள் டிவி ஒளிபரப்புக்கான உரிமத்தை அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச் சருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011-ல் முதல்வராக பதவியேற்றதும், செயலற்று இருந்த தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு உயிரூட்டினேன். வாடிக்கையாளர்களுக்கு மாதக் கட்டணம் ரூ.70-க்கு, 100 சானல் கள் என்ற அடிப்படையில் அரசு கேபிள் டிவி வழங்கி வருகிறது. 24 ஆயிரம் உள்ளூர் கேபிள் ஆபரேட் டர்கள் மூலமாக 65 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் நாட்டிலேயே மிகப் பெரிய எம்எஸ்ஓ-வாக அரசு கேபிள் டிவி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2.4.2008-ல் தமிழக அரசுக்கு ‘காஸ்’ (சிஏஎஸ்) முறையில் கேபிள் டி.வி. ஒளிபரப்பை மேற்கொள்வதற்கான உரிமத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழங்கியது. அதனடிப்படையில் சென்னை வாடிக்கையாளர்களுக்கு கேபிள் டிவி சேவையை தமிழக அரசு வழங்கி வருகிறது. பின்னர், கேபிள் டிவி இணைப்பு (ஒழுங்குமுறை) சட்டம்,1995-ல் திருத்தம் செய்து ‘காஸ்’ என்றிருந்ததை ‘டாஸ்’ (டிஜிட்டல் அட்ரஸபிள் சிஸ்டம் - டிஏஎஸ்) என மாற்றியமைத்தது.

அதைத் தொடர்ந்து, சென்னையில் டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி ஒளிபரப்பை வழங்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு கேபிள் டிவி நிறுவனம் மேற்கொண்டது. இதற்காக ரூ.50 கோடி செலவில் செட்டாப் பாக்ஸ் வாங்குவது, தேவையான டிஜிட்டல் கருவிகளை நிறுவுவது ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்தை செய்தது. மேலும் ‘டாஸ்’ உரிமத்துக்காக 5.7.2012-ல் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது.

தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த ஒன்பது தனியார் எம்எஸ்ஓ-க்களுக்கு உரிமம் வழங்கிய மத்திய அரசு, தமிழக அரசு கேபிள் டிவிக்கு உரிமத்தை வழங்காமல் உள்ளது.

கடந்த ஆட்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சரை தமிழக எம்.பி.க்கள் பலமுறை சந்தித்தும், பிரதமரிடம் முறையிட்டும் பலன் இல்லை. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு உரிமத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. நானும் அப்போதைய பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். எனினும் இன்னும் வழங்கப்படவில்லை.

‘டாஸ்’ உரிமம்

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த விலையில் தரமான கேபிள் டிவி சேவையை பெறும் வகையில், ‘டாஸ்’ உரிமத்தை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரி டம் தமிழக எம்.பி.க்கள் வியாழக் கிழமை நேரில் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x