Published : 14 Jul 2021 09:47 PM
Last Updated : 14 Jul 2021 09:47 PM
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மேகேதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி கர்நாடக மாநிலத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி கண்டனத்தை தெரிவிக்க வேண்டுமெனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று இரவு கூறியதாவது, ‘‘கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு காவிரி நதிநீரை பிரித்துக்கொடுப்பது சம்மந்தமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு பல ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.
அதை நடைமுறைப்படுத்துவதில் கர்நாடக மாநிலம் பல சமையங்களில் காலதாமதப்படுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கின்ற நிலையும் சில கட்டங்களில் ஏற்பட்டது. இதற்கிடையில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணைகட்டுவதற்கான ஆயத்த வேலைகளை ஆரம்பித்து கட்டுமானப்பணிகளை முடுக்கிவிட்டது.
தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், கர்நாடக மாநிலமானது காவிரி நதிநீர் வழிகளில் இடையூறின்றி தடுப்பணைகள் கட்டாமல் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஆனாலும் கர்நாடக அரசு அதனை மதிக்கவில்லை. கர்நாடக அரசு தீவிரமாக மேகதாது அணையை கட்டிமுடித்து நீரை தேக்கி முறையாக தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு தண்ணீரை பிரித்துக் கொடுப்பதில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.
கர்நாடக முதல்வருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதி உடனடியாக கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அதைப் பற்றி கர்நாடக அரசு கவலைப்படவில்லை.
இதற்கிடையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் டெல்லிக்கு சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து உடனடியாக கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் நடத்தி கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மத்திய அரசுக்கு அந்த கோரிக்கையை முன்வைத்தார்.
அதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். புதுச்சேரிக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 7 டிஎம்சி தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். அதில் தொடர்ந்து கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய காரைக்கால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் தண்ணீரை திறந்தாலும் கூட தமிழகத்துக்கு வரும் போது காரைக்கால் கடைமடை பகுதிவரை தண்ணீர் வந்து சேராததால் காரைக்கால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். 7 டிஎம்சி தண்ணீரில் சம்பா பருவத்தில் 6 டிஎம்சி தண்ணீரும், குறுவை பருவத்தில் ஒரு டிஎம்சி தண்ணீரும் என்று புதுச்சேரி மாநிலத்துக்கு தனி தீர்ப்பை காங்கிரஸ் - திமுக ஆட்சி காலத்தில் நாம் பெற்றோம்.
கர்நாடகமானது மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியும், கேரளமும் பாதிக்கப்படும். காரைக்கால் பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் புதுச்சேரி மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை நாம் பெறுவதற்கு மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி கர்நாடக மாநிலத்துக்கு கண்டனத்தை தெரிவித்து, மேகதாதுவில் அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென நாம் கோரிக்கை வைக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே காவிரி நதிநீர் வழக்கு முடிந்துவிட்ட நிலையில், அதே மனுவில் புதுச்சேரி மாநில அரசும் கர்நாடக மாநிலத்தை எதிர்த்து நீதிமன்றம் வழியாக மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் கடைமடை பகுதியாக இருக்கின்ற காரைக்காலில் பயிர் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். காரைக்கால் வரண்டுபோய்விடும்.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டினால் வேண்டுமென்றால் தண்ணீரை திறந்துவிடும், வேண்டாமென்றால் அந்த அணையை மூடிவிடும். இதனால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதுபோன்ற கர்நாடக அரசின் அராஜக போக்கை கண்டித்து புதுச்சேரி மாநில அரசு துரிதமாக செயல்பட்டு மாநில அரசின் உரிமையை காக்க வேண்டும்.
வருகின்ற 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். அண்டை மாநிலமான தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது சம்மந்தமாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. சிறுவர்கள் பள்ளிக்கு செல்லும்போது கரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும். குறிப்பாக 3வது அலை டெல்டா பிளஸ் குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ஆன்லைன் மூலம் மாணவர்கள் பாடங்களை கற்கின்றனர். ஆகவே மூன்றாவது அலையின் தாக்கத்தை பார்த்துவிட்டு, அதன்பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கலாம். அது இல்லாமல் முதல்வர் அவசரமாக பள்ளிகள் திறப்பதன் மூலம் கூட 3வது அலை அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது.
புதுச்சேரி மாநிலம் இன்னொரு கரோனா அலையை தாங்காது. ஆகவே பள்ளிகள் திறப்பது சம்மந்தமான முடிவை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் நாம் காப்பாற்ற முடியும்.’’இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT