Published : 14 Jul 2021 08:21 PM
Last Updated : 14 Jul 2021 08:21 PM

அடுக்குமாடி குடியிருப்புகள், நிறுவனங்கள் குப்பைகளை கையாள புதிய முறை:சென்னை மாநகராட்சி அறிமுகம் 

சென்னை

"நம் திடக்கழிவு நம் பொறுப்பு" என்பதற்கிணங்க திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் இடங்களிலேயே திடக்கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக தரம்பிரித்து அவர்களது வளாகத்திற்குள்ளேயே மக்கும் குப்பையை கையாள்வதற்கும், மக்காத / உலர் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான பணிகளை செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக சுமார் 5000 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி நாளொன்றுக்கு 100 கிலோவிற்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் அல்லது 5000 ச.மீ. பரப்பளவு மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகத்தின் உரிமையாளர்களாகிய பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் வளாகத்திற்குள்ளேயே திடக்கழிவுகளை மக்க செய்யவும் மற்றும் மக்காத குப்பையை தரம்பிரித்து மக்கும் குப்பையினை உரமாக்கிடவும், மேலும் மக்காத குப்பையினை மறுசுழற்சியாளர்களிடம் ஒப்படைக்கவும் வேண்டும்.

மேலும், அதிக அளவில் திடக்கழிவு உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றம் இதர பிற நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் திடக்கழிவுகளை தாங்களே கையாள வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அதிகளவில் திடக்கழிவுகளை உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உட்பட பல்வேறு பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு திடக்கழிவுகளை கையாளுவது குறித்து சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களால் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 1 முதல் 5 வரையுள்ள மண்டலங்களுக்கு வடக்கு வட்டார துணை ஆணையாளர் (பொ) சினேகா, தலைமையிலும், 6 முதல் 10 வரையுள்ள மண்டலங்களுக்கு மத்திய வட்டார துணை ஆணையர் ஷரண்யா அரிதலைமையிலும், 11 முதல் 15 வரையுள்ள மண்டலங்களுக்கு தெற்கு வட்டார துணை ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் கலான், தலைமையிலும் அந்தந்த மண்டல அலுவலகங்களில் அதிக அளவில் திடக்கழிவு உற்பத்தியாகும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் 11.07.2021 மற்றும் 12.07.2021 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மக்கும் குப்பைகளை வளாகத்திலேயே உரமாக்கவும், மேலும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் எவ்வாறு பயன்படுத்துவது எனவும், குப்பைகளை தரம் பிரிப்பது மற்றும் கழிவுகளை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், "நம் திடக்கழிவு நம் பொறுப்பு" என்பதற்கிணங்க திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் இடங்களிலேயே திடக்கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக தரம்பிரித்து அவர்களது வளாகத்திற்குள்ளேயே மக்கும் குப்பையை கையாள்வதற்கும், மக்காத / உலர் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான சேவைகளை வழங்க பெருநகர சென்னை மாநகராட்சியால் சேவை வழங்குநர்கள் (Service Providers) கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் https://chennaicorporation.gov.in/gcc/department/solid-waste-management/#service என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். மேலும், பெருமளவு திடக்கழிவு உருவாக்குபவர்கள் தங்கள் நிறுவனத்தில் உற்பத்தியாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தங்களது வளாகத்திலேயே உரம் தயாரிக்கவும், இதரப் பணிகளுக்கு பயன்படுத்தி மறுசுழற்சி செய்து குப்பையில்லாமல் வெளியேற்றுதல் (Zero Garbage) என்ற நிலையினை கொண்டு வர உரிய இயந்திரங்களை கொள்முதல் செய்து குப்பைகளை கையாள வேண்டும் எனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் இப்பணிகளை செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தாங்களாகவும் அல்லது மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ள சேவை வழங்குநர்களை பயன்படுத்தியும் திடக்கழிவுகளை முறையாக கையாண்டு மக்கும் திடக்கழிவுகளை தங்கள் வளாகத்திற்குள்ளேயே உரமாக பயன்படுத்தவும், மக்காத திடக்கழிவுகளை மறுசுழற்சியும் செய்து பயன்படுத்தி குப்பையில்லா சென்னையை உருவாக்க முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாகும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”
இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x