Published : 14 Jul 2021 07:45 PM
Last Updated : 14 Jul 2021 07:45 PM
மதுரை எய்ம்ஸ் ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் மட்டும்தான் கட்டப்பட்டுள்ளது என்றும் இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று சென்னையில் அவர் அளித்த பேட்டி:
எச்.எல்.எல். நிறுவனம் ரூ.700 கோடி செலவு செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. தமிழக முதல்வர்தான் அதை நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அந்நிறுவனம் செயல்பட தொழில்துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி, மத்திய அரசின் சார்பாக நடத்தட்டும் அல்லது மாநில அரசு சார்பாக நாங்கள் நடத்தத் தயாராக இருக்கிறோம் என்ற கோரிக்கையினை மத்திய அரசிடம் அளித்தார்.
பயோ டெக் நிறுவனத்தின் சார்பிலும் ஆய்வு செய்திருக்கிறார்கள். மார்ச் மாதத்திற்கு முன்னாலேயே ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெண்டர் விடப்பட்டதாகவும், எந்த நிறுவனமும் அந்த டெண்டரில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய நிலை என்னவென்று சென்று பார்த்தால்தான் தெரியும்.
மதுரை எய்ம்ஸ் ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் மட்டும்தான் கட்டப்பட்டுள்ளது. இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. ரூ.1,400 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்குப் பிறகு திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடுதான் வரும். ஜெய்கா நிறுவனத்தின் சார்பில் டிசைன் கொடுத்தியிருக்கிறார்கள். பணிகளில் ஏற்பட்ட காலதாமதம் பற்றித் தெரிய வேண்டும். பிறகு கட்டுமானப் பணிகளைத் தொடங்கி முடிவுற்றபிறகுதான் மாணவர் சேர்க்கை நடைபெறும். இச்செய்தி குறித்தும் தமிழக முதல்வர் சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவிக்க உள்ளோம்.
கரும்பூஞ்சை நோயினால் இதுவரை 3,950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்குத் தேவையான ஆம்போடெரிசின் 21,365 என்ற அளவிலும், பொசகொனோசோல் 3000 என்ற எண்ணிக்கையிலும், மாத்திரைகளைப் பொறுத்தவரை 7,770 என்ற அளவிலும் கையிருப்பில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் ஆன்லைன் மூலம் அறியப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT