Published : 14 Jul 2021 04:51 PM
Last Updated : 14 Jul 2021 04:51 PM
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மேடை அமைத்து பேசுவதற்கு அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றம், காவல்துறையை விமர்சனம் செய்த வழக்கில் எச்.ராஜா முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை திருமயத்தில் 2018 செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரின் பேரில் என் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் விமர்சனம் செய்ததற்காக உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமயம் போலீஸார் திருமயம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்ற பத்திரிக்கையில் நான் தலைமறைவாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜுலை 27-ல் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போலீஸார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. தந்தை பெரியார் திராவிட கழக வழக்கறிஞர் கண்ணன் தரப்பில் வழக்கில் தங்களையும் ஒரு எதிர்மனுதாராக சேர்க்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசுத் தரப்பில், பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஜூலை 16-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT