Published : 14 Jul 2021 03:58 PM
Last Updated : 14 Jul 2021 03:58 PM
“பெங்களூருவிலிருந்து திரும்ப வந்தபோது அனைவரும் ஒற்றுமையோடு இருந்து இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், அதைக் கேட்காமல் இன்று ஆட்சியை இழந்துவிட்டு நிற்கிறார்கள். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கட்சியைக் காப்பாற்றுகிற பொறுப்பு வந்தது. இப்போது திரும்பவும் அதேபோன்ற சூழ்நிலை வந்துள்ளது” எனத் தொண்டர்களிடம் சசிகலா பேசினார்.
சசிகலா சமீபகாலமாக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். நேற்று 3 தொண்டர்களிடம் பேசும்போது கட்சியின் நிலை பற்றிப் பேசினார்.
சேலத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்கிற தொண்டருடன் சசிகலா தொலைபேசியில் பேசும்போது, “கட்சியை நல்ல முறையில் கொண்டுவருவேன். தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒன்றும் கவலைப்படாதீர்கள். கட்சியை நல்லபடியாகக் கொண்டு வந்துவிடலாம். ஒன்றும் மனம் தளர்ந்து விடாதீர்கள். நான் வந்துவிடுவேன். கவலைப்படாதீர்கள்.
1987ஆம் ஆண்டு டிசம்பரில் எம்ஜிஆர் மறைந்த போதிலிருந்தே இதுபோன்ற விஷயங்களைத்தான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதனால் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கட்சியை நன்றாகக் கொண்டு வரவேண்டும். அதனால் எண்ணத்தை வேறு எங்கும் திருப்புவதே இல்லை'' என்று பேசினார்.
சுகந்தி என்கிற தொண்டருடன் சசிகலா பேசும்போது, ''நிச்சயமாக வருவேன். இனிமேல் இந்தக்கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். இந்த ஊரடங்கு முடிந்தவுடன் கட்டாயம் வருவேன். பெண்கள் அனைவரும் நிச்சயம் வரவேண்டும்'' என்று தெரிவித்தார்.
குவைத்தைச் சேர்ந்த சக்திவேல் ராஜன் என்கிற தொண்டருடன் சசிகலா பேசும்போது, “இங்கு 19ஆம் தேதி வரை ஊரடங்கு போட்டுள்ளார்கள். தொடர்ந்து போட்டு வருகிறார்கள். இது முடிந்தவுடன் அம்மா (ஜெயலலிதா) சமாதிக்குச் சென்று பார்க்கவேண்டும். பின்னர் ஊர் ஊராகச் சென்று தொண்டர்களைச் சந்திக்க உள்ளேன்.
எம்ஜிஆர் பாடல்களில் அனைத்துக் கருத்துகளையும் சொல்லிவிடுவார். ஆகவே, சிறு வயதிலிருந்தே அவரது பாடல்களைப் பார்த்து அதன்படி நடக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் கட்சிக்கே உறுதுணையாக இருந்து அம்மாவுக்கு (ஜெயலலிதா) சேவை செய்யும் வாய்ப்பு நல்ல வழியில் நடந்தது.
அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் பிரச்சினை எல்லாம் ஏற்பட்டபோது, அவரது அரசைக் காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப்போடு நான் உடனடியாக அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்துவிட்டுதான் பெங்களூருவுக்குச் சென்றேன். திரும்ப வந்தபோது எல்லாப் பிள்ளைகளும் ஒற்றுமையோடு இருந்து இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னேன்.
ஆனால் அதைக் கேட்காமல் இன்று ஆட்சியை இழந்துவிட்டு நிற்கிறார்கள். எம்ஜிஆர் மறைவின்போது கட்சியைக் காப்பாற்றுகிற பொறுப்பு வந்தது. அதேபோன்ற சூழ்நிலை இப்போது மீண்டும் வந்துள்ளது. அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறேன்.
இது எனக்குப் புதிது இல்லை, ஏற்கெனவே இது அம்மாவுக்கு (ஜெயலலிதா) நடந்துதானே. இப்போது எனக்கு நடக்கிறது. நிச்சயம் நல்லபடியாக கட்சியைக் கொண்டு வந்துவிட முடியும், ஆட்சியையும் பிடிக்க முடியும். ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவந்து ஏழை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். தொண்டர்களுக்கு நிறைய செய்ய வேண்டும். நிச்சயம் நல்லபடியாகக் கொண்டு வந்துவிடுவேன்.
ஜெயலலிதா வரும்போது மூத்த அமைச்சர்கள் எதிர்த்தார்கள், ஜெயலலிதாவுக்குத் தொண்டர்கள் ஆதரவு அதிகம் இருந்தது. அதனால் நல்லபடியாக அவரைக் கொண்டு வந்தோம். முதல்வரானார். இப்போதும் அதேபோன்று நிலை உள்ளது. தொண்டர்கள் ஆதரவு நமக்கு அதிகம் உள்ளது”.
இவ்வாறு சசிகலா தொண்டர்களுடன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT