Published : 14 Jul 2021 04:18 PM
Last Updated : 14 Jul 2021 04:18 PM

பழநியில் கேரளப் பெண் தங்கியிருந்த விடுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

பிரதிநிதித்துவப் படம்.

பழநி

பழநியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படும் கேரளப் பெண் தங்கியிருந்த விடுதியில் தடயவியல் நிபுணர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். கேரளா சென்ற தமிழக போலீஸார் இரண்டாவது நாளாக சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவருடன் வந்த நபரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு வந்த கேரளாவைச் சேர்ந்த பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் எழுந்ததையடுத்து, பழநி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கேரளப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து எந்த முகாந்திரமும் இல்லை எனவும், கேரள மருத்துவர்களின் அறிக்கையிலும் இது கூறப்பட்டுள்ளது எனவும், திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி நேற்று (ஜூலை 13) தெரிவித்தார்.

இந்நிலையில், ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையில் ஒரு தனிப்படையும், பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும் கேரளா சென்று பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் மற்றும் அவருடன் வந்த தர்மராஜ் என்பவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஐந்து மணி நேரம் விசாரணை நடத்திய தனிப்படையினர், இன்றும் (ஜூலை 14) தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையின் தொடர்ச்சியாக, கேரளப் பெண் மற்றும் தர்மராஜ் ஆகியோரை பழநி அழைத்து வந்து விசாரணை நடத்த தமிழக போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பழநியில் உள்ள தங்கும் ‌விடுதியில் இருவரும் தங்கியிருந்த அறையில் இன்று தடயவியல் துறை உதவி இயக்குநர் ராஜேஷ் தலைமையிலான நிபுணர் குழுவினர் தடயங்களைச் சேகரித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x