Published : 14 Jul 2021 02:06 PM
Last Updated : 14 Jul 2021 02:06 PM
தமிழகத்தில் முதன்முறையாக வரும் நிதி நிலை அறிக்கையில் விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால், அது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது.
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்.பி. செ.ராமலிங்கம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள எம்எல்ஏக்கள், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை ஆணையர் எம்.வள்ளலார் மற்றும் தஞ்சாவூர், திருவாருர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் முதன்முறையாக விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், அந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய கோரிக்கள் குறித்துப் பேசி, அதற்கான கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் விவசாயிகள் வழங்கினர்.
அதில், "100 நாள் வேலைத் திட்டத்தில் 50 சதவீதத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும். அம்மாபேட்டை ஒன்றியத்தில் புதிதாக வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். ரசாயன உரங்களைத் தடை செய்ய வேண்டும். வேளாண் இடுபொருட்களான மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இளைஞர்களை அதிகஅளவில் விவசாயத்தில் ஈடுபடுத்தும் வகையில், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும்.
வேளாண்மை நவீன இயந்திரங்களான அறுவடை இயந்திரம், நடவு இயந்திரங்களை மானிய விலையில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
நீர் மேலாண்மையை அதிகப்படுத்தும் வகையில், ஏரி, குளங்களைச் சீரமைக்க வேண்டும். தடுப்பணைகளை அதிகளவில் கட்டவேண்டும். குறுவை, சம்பா சாகுபடிக்கு ஏற்ற வகையில் புதிய நெல் ரகங்களையும், விதைகளையும் அறிமுகம் செய்ய வேண்டும், உற்பத்திப் பொருட்களைப் பாதுகாக்க, கிராமங்கள்தோறும் கிட்டங்கி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். எண்ணெய் வித்துகள், திணை வகைகள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்" எனப் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்து மனுவாக விவசாயிகள் அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT