Published : 14 Jul 2021 11:33 AM
Last Updated : 14 Jul 2021 11:33 AM
அனுபவமும், இளமையும் சேர்ந்த கூட்டு முயற்சியால், தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக வளரும் என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர், வரும் 16-ம் தேதி தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொறுப்பேற்க உள்ளார்.
இதற்காக, கோவையில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக சென்னைக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி, கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் அண்ணாமலை இன்று (ஜூலை 14) காலை வழிபாடு நடத்தினார். பின்னர், அவருக்கு மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயிலில் வழிபாடு நடத்தியபின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"வரும் 16-ம் தேதி பிற்பகல் சென்னையில் பொறுப்பேற்க இருக்கின்றேன். சென்னை செல்லும் வழியில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்க உள்ளேன். கரோனா காலமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணமாகிறோம்.
பாஜக வளர்ச்சிக்காகச் சிறப்பாகச் செயல்படுவேன். அனுபவமும், இளமையும் சேர்ந்த கூட்டு முயற்சியால், தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக வளரும். பாஜகவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர், தேசிய அளவில் பொறுப்பில் இருக்கின்றனர்.
ஒருபுறம் இளமையானவர்கள் கட்சியில் இருக்கின்றனர். மற்ற கட்சிகளில் ஒரு தலைவர், ஒரு குடும்பம் என இருப்பார்கள். ஆனால், பாஜக தனி மனிதக் கட்சி கிடையாது. இங்கு வயது முக்கியமில்லை".
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
அப்போது, கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்கள் நரேந்திரன், கனகசபாபதி, பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநகர் மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT