Last Updated : 31 Mar, 2014 12:00 AM

 

Published : 31 Mar 2014 12:00 AM
Last Updated : 31 Mar 2014 12:00 AM

சிதம்பரம் பாமக புதிய வேட்பாளரால் அதிமுக, வி.சி. அதிர்ச்சி

சிதம்பரம் தொகுதியில் பாமக வேட்பாளராக மணிரத்னம் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அதிமுக-வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியில் தனக்கு சீட் கிடைக்காததாலும் தனக்குள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாகவும் தொழிலதிபர் மணிரத்தினம் சனிக்கிழமை பாமக-வில் சேர்ந்தார்.

பாமக-வும் அவரை சிதம்பரம் தொகுதியில் நிறுத்த முடிவு செய்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் அதிமுக-வினரும் விடுதலைச் சிறுத்தைகளும் மட்டுமே தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் வள்ளல் பெருமானும் பாமக-வினரும் சுணக்கமாகவே உள்ளனர். இந்நிலையில் மணிரத்தினத்தின் வரவு அதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவனை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே முன் னாள் அமைச்சர் செங்கோட்டை யனை சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது அதிமுக. அவரும் சிதம்பரத்தில் வீடு எடுத்துத் தங்கி தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்ப தால் காங்கிரஸ் வேட்பாளர் வள்ளல்பெருமானை அதிமுக- வும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

வெள்ளிக்கிழமை வரை இங்கு இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் தான் போட்டி என்ற நிலையே இருந்தது. ஆனால், மணிரத்தினம் பாமக-வில் இணைந்ததும் நிலைமை மாறிவிட்டது.

அதிமுக-வின் பண பலத்தை யும் சிறுத்தைகளின் சமுதாய பலத்தையும் சமாளிக்க முடியாமல் சுருண்டு கிடந்த பாமக வட்டாராம் இப்போது சுறுசுறுப்பாய் களத்துக்கு வந்திருக்கிறது. மணிரத்தினம் வரவால் தலித் ஓட்டுகள் யாருக்கு என்பதில் மாற்றம் ஏற்படும் எனத் தெரிகிறது.

வன்னியர் வாக்கு வங்கியை குறிவைத்து காடுவெட்டி குருவும் மணிரத்தினத்துக்காக களத்தில் இறங்குவார். செங் கோட்டையனின் தேர்தல் வியூகங் களை சமாளிக்கவும் திருமாவள வனை வீழ்த்தவும் மணிரத்தினத்தை பாமக களத்தில் இறக்கியிருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x