Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM

9.23 லட்சம் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்

திருவள்ளூர்

நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க தமிழக சுகாதாரத் துறை சார்பில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 5 வயதுக்கு உட்பட்ட 9.23 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை, பூந்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.

இதில், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வநாயகம், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

21 மாநிலங்களில் கடந்த இரு ஆண்டுகளாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தடுப்பூசியை குழந்தை பிறந்த ஒன்றரை மாதத்தில் ஒருமுறை, மூன்றரை மாதத்தில் ஒருமுறை, 9 மாதத்தில் ஒருமுறை என 3 முறை போடவேண்டும். முதல் தடுப்பூசி போட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அடுத்த இரு தடுப்பூசிகளைப் போட குறுஞ்செய்தி மூலம் நினைவூட்டப்படும். இந்த தடுப்பூசிக்காக தமிழக அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.12 ஆயிரம் செலவிடுகிறது.

தடுப்பூசி போடப்படாத நிலையில் நாடு முழுவதிலும் நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்கவே தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுப் பயிற்சிக்கு மாணவர்கள் தயாராவது தவறில்லை. ஏனெனில், கூடுதலாக கல்வி கற்பது தவறானதல்ல. நீட் தேர்வில் விலக்கு பெறுவது தமிழக அரசின் மிக முக்கியமான கொள்கைத் திட்டம். இதுதொடர்பாக முதலமைச்சர், பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு எதிராக பாஜக மாநில துணைத் தலைவர் வழக்குப் போட்டுள்ளார். இதில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டப் போராட்டத்தில் எங்கேயாவது சிறு அளவிலான பாதிப்பு ஏற்பட்டு, நீட் தேர்வு வந்துவிட்டால் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் சங்கடமடையக் கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்வுக்காக படிக்க வேண்டும் என்று சொல்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x