Published : 10 Feb 2016 03:13 PM
Last Updated : 10 Feb 2016 03:13 PM
வரும் சட்டப்பேரவை தேர்தலில், புதுச்சேரியில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப்காஸ்டிங் மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்கும் முறை அமல்படுத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜெய்தி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் இந்தாண்டு மே, ஜூன் மாதங்களில் முடிகிறது. இதையடுத்து, இந்த மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில், தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை, இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, ஆணையர்கள் ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக நேற்று (செவ்வாய்கிழமை) மாலை அவர்கள் புதுச்சேரி வந்தடைந்தனர். முதற்கட்டமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜெய்தி, "வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப்காஸ்டிங் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும்.
புதுச்சேரியில் உள்ள உழவர்கரை, உருளையன் பேட்டை, காரைக்கால் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளிலும் முதன் முறையாக விவிபிஏடி (VVPAT) அதாவது வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு காண்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்காக 20,000 இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இந்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தாங்கள் யாரும் வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.
இதுதவிர மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வாக்குச்சாவடி அமைக்கப்படும். தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் பறக்கும் படையினர் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் ஜி.பி.எஸ். கருவி மூலம் இணைக்கப்படும்.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே தேதியில் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT