Last Updated : 13 Jul, 2021 08:57 PM

 

Published : 13 Jul 2021 08:57 PM
Last Updated : 13 Jul 2021 08:57 PM

அவசர அழைப்பு தகவலை பெற்ற 5 நிமிடங்களில் உடனடி நடவடிக்கை: கோவை மாநகர காவல்துறை முன்னிலை

கோவை

அவசர அழைப்பு தொடர்பாக, கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவலைப் பெற்ற, அடுத்த 5 நிமிடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இச்செயல்பாடுகளில் கோவை மாநகர காவல்துறை முன்னணியில் உள்ளதாகவும் மாநகர காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

நாட்டின் அரசு நிர்வாகத்தில், பல்வேறு துறைகள் இருந்தாலும், மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள துறைகளில் முதன்மையானது காவல்துறை. அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்க, அரசு நிர்வாகத்தின் சார்பில், காவல்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவ சேவை ஆகியவற்றுக்கு தனித்தனியே மூன்று இலக்க தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. சட்டம் ஒழுங்கு சார்ந்த, குற்றங்கள் சார்ந்த, போக்குவரத்து சார்ந்த அவசர புகார்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க, பொதுமக்கள், காவல்துறையின் பிரத்யேகமான ‘100’ என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்கின்றனர்.

சென்னையில், பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நவீன கட்டுப்பாட்டு அறைக்காவலர், இந்தத் தகவலைப் பெற்று, உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பை மாற்றி விடுகின்றார். சம்பந்தப்பட்ட மாநகர அல்லது மாவட்டக் காவல்துறையினர் இந்த அழைப்பு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

உடனடி நடவடிக்கை

இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறை உயரதிகாரி ஒருவர் இன்று ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது,‘‘ மாநகர காவல்துறையில் 24 ஜீப் ரோந்து வாகனங்கள், 42 பைக் ரோந்து வாகனங்கள் உள்ளன. அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சில வாகனங்களில் ஜிபிஎஸ் சேவை பழுதடைந்துள்ளது. கோவை மாநகரில் இருந்து மக்களால் அழைக்கப்பட்டு, சென்னை நவீன கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தவுடன், அங்கிருந்து உடனடியாக கோவை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. மாநகரின் உட்புறப் பகுதிகள் என்றால் தகவல் கிடைத்த அடுத்த 5 முதல் 7 நிமிடங்களுக்குள்ளும், புறநகரை ஒட்டிய மாநகர் பகுதி என்றால் அடுத்த 5 முதல் 10 நிமிடங்களுக்குள்ளும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள மாநகர காவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்கின்றனர். அழைத்தவரின் பிரச்சினை குறித்து கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

அவசரகால அழைப்புகள் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, மாநகர காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் நவீன கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்கள் ஆய்வு செய்கின்றனர். தர மதிப்பீடு வழங்குகின்றனர். மற்ற மாநகரங்களை காட்டிலும், அவசர கால அழைப்புகள் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுப்பதில் கோவை மாநகர காவல்துறை முன்னணியில் உள்ளது. தற்போதைய சூழலில் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வாராந்திர நாட்களில் தினமும் சராசரியாக 75 அழைப்புகளும், வார இறுதி நாட்களில் இதை விட கூடுதல் அழைப்புகளும் கிடைக்கப் பெறுகின்றன. இந்த அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x