Published : 13 Jul 2021 03:58 PM
Last Updated : 13 Jul 2021 03:58 PM
மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து, இன்று திருச்சியில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ்த் தேசியப் பேரியக்கம், காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கூறிய கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜூலை 13-ம் தேதி எடியூரப்பாவின் உருவ பொம்மையைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அறிவித்திருந்தார்.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன் தமிழ்த் தேசியப் பேரியக்கம், காவிரி உரிமை மீட்புக் குழு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மையைத் தீயிட்டுக் கொளுத்துவதற்காக எடுத்து வந்தனர். இதைக் கண்ட போலீஸார், உருவ பொம்மையை அவர்களிடம் இருந்து பறிக்க முயன்றனர். இதையடுத்து, போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு நேரிட்டது. இருப்பினும், போலீஸார் உருவ பொம்மையைப் பறித்துச் சென்றுவிட்டனர். எடியூரப்பாவின் உருவப் படங்களைக் கொளுத்த முயன்றபோது, அவற்றையும் போலீஸார் பறித்துச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து, ''கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைக் கண்டிக்கிறோம். மேகதாது அணையைக் கர்நாடக அரசு கட்டக் கூடாது. அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேரத் தலைவரை நியமிக்க வேண்டும். காவிரி அணைகளைக் கர்நாடக அரசு திறந்து மூடும் தன்னாட்சி அதிகாரத்தைக் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்குக் காவிரி உரிமை மீட்புக் குழுவின் திருச்சி அமைப்பாளர் மூ.த.கவித்துவன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொருளாளர் அ.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் வே.க.இலக்குவன், மாநகரச் செயலாளர் கே.ச.இனியன், மகளிர் ஆயம் த.வெள்ளம்மாள், தெய்வத் தமிழ்ப் பேரவையின் நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, வே.பூ.ராமராஜ், வி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT