Published : 13 Jul 2021 03:31 PM
Last Updated : 13 Jul 2021 03:31 PM
தென் ஆப்பிரிக்காவில் கலவரம் ஏற்பட்டுள்ள சூழலில் அந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வணிக நிறுவனங்கள், சொத்துகளைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களைப் பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
“தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா, 1999ஆம் ஆண்டு, ஆயுதம் வாங்கியபோது, 2 பில்லியன் டாலர் கையூட்டாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அது தொடர்பான, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், ‘கரோனா காலத்தில் சிறையில் அடைத்து, என்னைக் கொல்ல முயல்கின்றார்கள்; எனவே, நான் கைதாக மாட்டேன்’ என அவர் அறிவித்தார். தண்டனையை ஒத்திவைக்கக் கோரிய அவரது மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதனால், ஜூலை 7ஆம் தேதி இரவு கைதானார்.
அவர் குற்றம் அற்றவர், தற்போதைய ஆட்சியாளர்கள் அவரைப் பழிவாங்க முயல்கின்றார்கள், விடுதலை செய்ய வேண்டும்’ எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடைகள், வணிக நிறுவனங்களுக்கு உள்ளே புகுந்து, பொருள்களைச் சூறையாடி வருகின்றார்கள், கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களால், அந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வணிக நிறுவனங்கள், சொத்துகளைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. துணிந்தவர்கள், துப்பாக்கிகளுடன் களம் இறங்கி இருப்பதாக, தமிழ் அமைப்புகளிடம் இருந்து, எனக்குச் செய்திகள் வந்தன.
எனவே, அச்சத்தின் பிடியில் உள்ள தென் ஆப்பிரிக்க இந்தியர்களுக்குத் தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என, மத்திய அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்”.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT