Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: சமூக வலைதளங்களில் பரவும் அறிவிப்பு விளம்பர பலகை

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் முன்பு ஆக்கிரமிப் பாளர்கள் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை.

தஞ்சாவூர்

ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளைமீட்கும் நடவடிக்கைகள் தற்போது வேகம் எடுத்துள்ள நிலையில், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பலஆண்டுகளாக குடியிருந்து வரும் 11 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் விவரங்கள் குறித்த விளம்பர பலகை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமானதும், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதுமான புன்னை நல்லூர்மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 14,390 சதுர அடி இடம், கோயில் அருகே முஸ்லிம் தெருவில் உள்ளது. இந்த இடத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள 11 பேர் மீது இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் 15 தினங்களுக்குள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்என கோயில் நிர்வாகம் சார்பில் கடந்தபிப்ரவரி மாதம் அப்பகுதியில் விளம்பரப் பலகை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் அப்போது செய்தியும் வெளியானது. அதன்பிறகு சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியானதாலும், ஆக்கிரமிப்பாளர்கள் உரிமையியல் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததாலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொய்வடைந்தது.

இதனிடையே, தற்போது புதிதாக பொறுப்பேற்று உள்ள திமுக அரசு, ஆக்கிரமிப்பில் உள்ள இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இடங்களை மீட்க தீவிரம் காட்டி வரும் நிலையில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குரிய இடத்தில்உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்என பக்தர்கள், இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் விவரங்கள் அடங்கிய விளம்பர பலகை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன் கூறியதாவது:

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்அருகே தெற்கு முஸ்லிம் தெரு பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துஇருந்த 11 பேருக்கு, ஆக்கிரமிப்பை காலிசெய்யுமாறு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

எனவே ஆக்கிரமிப்பாளர்கள் 15 தினங்களுக்குள் அந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. கோயிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளும் முறைப்படி ஒவ்வொன்றாக மீட்கப்படும். இதில் மதம்,இனம் என்ற எந்த பாகுபாட்டுக்கும் இடம் தரப்படாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x