Published : 12 Jul 2021 06:35 PM
Last Updated : 12 Jul 2021 06:35 PM
சாலையில் நண்பருடன் சென்ற ஆட்டோ ஓட்டுநரை நிறுத்தி விசாரித்த ரோந்து போலீஸுடன் ஏற்பட்ட வாக்குவாத்தில் பீர் பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவலரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயப்பாக்கம் பகுதிக்குட்பட்ட கிரீன் கார்டன் பகுதியில் உள்ள அம்பத்தூர் கூட்டுறவு நகர்ப் பகுதியில் வசித்து வந்தவர் பாக்யராஜ் (32). இவருக்கு அபிராமி (30) என்கிற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். பாக்யராஜ் ஆட்டோ ஓட்டுநராக இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் தனது வீட்டின் அருகில் தனது சக ஓட்டுநரான நண்பர் பிரதீப் (30) உடன் ஆட்டோவில் சென்றதாகவும், அப்போது அங்கு வந்த அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருமுல்லைவாயல் காவல் நிலையத் தலைமைக் காவலர் சந்தோஷ், அவர்களை அழைத்து விசாரித்ததாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பீர் பாட்டிலை உடைத்து பாக்யராஜ் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தலைமைக் காவலர் சந்தோஷ், பாக்யராஜைக் காப்பாற்ற அவரை ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ரத்தப் பெருக்கு நிற்காததால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், பாக்யராஜின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து போலீஸார் தரப்பில் ஒரு தகவலும், உயிரிழந்த பாக்யராஜ் தரப்பில் ஒரு தகவலும் கூறப்படுகிறது. நண்பருடன் சேர்ந்து மது அருந்திய பாக்யராஜை தலைமைக் காவலர் சந்தோஷ் விசாரித்துள்ளார். பொதுவெளியில் மது அருந்துவது குறித்து வீடியோ எடுத்துள்ளார். நீ யார், உன் விலாசத்தைச் சொல் எனக் கேட்டுள்ளார். அப்போது அவருக்கும், தலைமைக் காவலர் சந்தோஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பாக்யராஜ், தன் மீது நடவடிக்கை எடுத்தால் தற்கொலை செய்துகொள்வேன் என பீர் பாட்டிலை உடைத்து மிரட்டியுள்ளார்.
பின்னர் தன் கையில் உள்ள பாட்டிலை உடைத்து தனக்குத் தானே கழுத்தில் அறுத்துக் கொண்டார். அவரைத் தலைமைக் காவலர் சந்தோஷ் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தும் அவர் உயிரிழந்துவிட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பாக்யராஜின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாக்யராஜ் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி அபிராமிக்கு போலீஸார் நண்பகல் 1 மணியளவில் தகவல் கூறியுள்ளனர். மருத்துவமனைக்கு வந்த பாக்யராஜின் மனைவி அபிராமி உட்பட உறவினர்கள் பலர் போலீஸார் தூண்டுதலின் பேரிலேயே பாக்யராஜ் கழுத்தை அறுத்துக் கொண்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜின் மனைவி அபிராமி, தனது கணவர் பாக்யராஜ் அவரது நண்பர் பிரதீப்புடன் ஆட்டோவில் சென்றார். அப்போது அங்கு வந்த ரோந்துக் காவலர் சந்தோஷ் குடிப்பதற்காக இங்கு வந்தீர்களா எனக் கூறியதால் பாக்யராஜ் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது தனது கணவர் புதிதாக ஆசைப்பட்டு வாங்கிய ஐபோனைக் காவலர் சந்தோஷ் பிடுங்கிக்கொண்டார். செல்போனைத் திரும்பக் கொடுக்குமாறு என் கணவர் வாக்குவாதம் செய்துள்ளார். செல்போனைத் தர மறுத்ததால் எனது கணவர் கீழே இருந்த பீர் பாட்டிலை எடுத்து செல்போன் தராவிட்டால் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என மிரட்டினார். காவலர் அலட்சியமாக இருந்ததால் பாக்யராஜ் கழுத்தை அறுத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரின் தற்கொலை தொடர்பாக திருமுல்லைவாயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்தபோது உடனிருந்த பாக்யராஜின் நண்பர் பிரதீப்பிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவலர் சந்தோஷிடம் துறைரீதியான விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
ஒரு மரணம் குறித்து இரு தரப்பிலும் வெவ்வேறு வகையான தகவல்கள் பகிர்வதால், உரிய விசாரணை நடத்திய பின்னரே முடிவெடுக்க முடியும் என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT