Published : 12 Jul 2021 05:58 PM
Last Updated : 12 Jul 2021 05:58 PM
புதுச்சேரியில் பாஜகவின் நிலை தற்போது பரிதாபமாக உள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காரைக்காலில் இன்று (ஜூலை 12) நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி கலந்துகொண்டார். காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் கட்சியினருடன் மாட்டு வண்டி ஓட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் நாராயணசாமி கூறியதாவது:
''புதுச்சேரியில் அமைந்துள்ள முதல்வர் என்.ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மூன்றாவது அலை கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மாநில அரசு அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியை வேகமாகச் செய்ய வேண்டும். 13 லட்சம் மக்கள்தொகையில் இதுவரை 4 லட்சம் பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டால்தான் கரோனாவிலிருந்து புதுச்சேரி மாநிலத்தைப் பாதுகாக்க முடியும்.
இந்த ஆட்சியில் காரைக்கால் பிராந்தியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த காரைக்காலைச் சேர்ந்த கமலக்கண்ணனுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போதைய அரசில், காரைக்காலைச் சேர்ந்த சீனியர் ஒருவர் புறக்கணிக்கப்பட்டு, ஜூனியருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கும் முக்கியமற்ற துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காரைக்கால் புறக்கணிக்கப்பட்டதுபோல தற்போதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் நிலை தற்போது பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் மக்கள் பணியில் ஈடுபடும் துறைகளாக இல்லை. துணை முதல்வர், 3 அமைச்சர்கள் பதவி எனப் பல்வேறு நிலைகளில் பேரம் பேசினர். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. இது பாஜகவுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவின் வெளி வேஷம், ஆட்களைப் பிடிக்கும் நிலை தற்போது புதுச்சேரி மாநில மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்துள்ளது. பாஜகவில் பாடுபட்டவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படாததால் அவர்கள் நொந்து போயுள்ளனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காகத்தான் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டதாக ரங்கசாமி கூறினார். ஆனால் மாநில அந்தஸ்து குறித்து பாஜக எதுவும் சொல்லவில்லை. பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அண்மையில் பிரதமரைச் சந்தித்தபோதுகூட மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைக்கவில்லை. பாஜகவுக்கு அந்த எண்ணம் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவதாகக் கூறி வரும் பாஜகவினர் யாரும் காங்கிரஸ் கட்சியை அசைத்துப் பார்க்க முடியாது. பீனிக்ஸ் பறவையைப் போல காங்கிரஸ் எழுந்து செயல்படும். புதுச்சேரியிலிருந்து பாஜகவை வேரோடு பிடுங்கி வெளியே அனுப்பும் பணியை காங்கிரஸ் செய்யும்''.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT