Published : 12 Jul 2021 04:45 PM
Last Updated : 12 Jul 2021 04:45 PM
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூலை 12) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"முதலாவதாக, அடையாறு மண்டலம், வார்டு-126, சாந்தோம் நெடுஞ்சாலையில் மூலதன நிதியின் மூலம் ரூ.5.47 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சாந்தோம் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மாதா சர்ச் சாலை முதல் லூப் சாலை சந்திப்பு வரையில் பழுதடைந்த கால்வாயை இடித்து விட்டு புதியதாக மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கிழக்கு பகுதியில் மொத்தமுள்ள 750 மீட்டர் நீளத்தில் தற்போது சுமார் 220 மீட்டர் நீளத்திற்கும், மேற்கு பகுதியில் மொத்தமுள்ள 750 மீட்டர் நீளத்தில் தற்போது சுமார் 150 மீட்டர் நீளத்திற்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
மேலும், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையின் இருபுறங்களிலும் முறையான நடைபாதை இல்லாத காரணத்தினாலும், இயந்திர வாகனம் சாரா போக்குவரத்தினை (Non-Motorised Transport) ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.2.91 கோடி மதிப்பில் 3,370 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வார்டு-175-ல் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கஸ்தூரிபாய் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் வரை 2.1 கி.மீ. நீளத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதை, சைக்கிள் பாதை மற்றும் சுற்றுப்புறத்தை மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சுமார் 500 மீட்டர் நீளத்தில் 16,500 மரக்கன்றுகளுடன் அமைக்கப்பட்டுள்ள மியாவாக்கி அடர்வனத்தில் மரக்கன்றினை நட்டு பார்வையிட்டார்.
தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-136, தியாகராய நகரில் சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.28.45 கோடி மதிப்பில் 600 மீ. நீளம் மற்றும் 4 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்தை தியாகராய நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய ஆகாய நடைபாதைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சீர்மிகு நகரத் திட்ட நிதியின் கீழ் வார்டு-136, தியாகராய சாலை மற்றும் தணிகாச்சலம் சாலை சந்திப்பில் ரூ.40.79 கோடி மதிப்பில் 1488 ச.மீ. பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பலஅடுக்கு தானியங்கி வாகன நிறுத்த மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, சீர்மிகு நகர திட்டத்தில் பொது தனியார் கூட்டு செயல்முறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மிதிவண்டி பகிர்மான திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டார்.
பின்னர், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-117-ல் உள்ள மாம்பலம் கால்வாயினை ரூ.106.47 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்திலிருந்து சி.ஐ.டி நகர் வரை 4.30 கி.மீ நீளத்திற்கு மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்டார். இதில், வெள்ளத் தடுப்புச் சுவர் பணி, கால்வாய் தரை பணி, நடைபாதை அமைத்தல், மிதிவண்டி ஓடுதளம் அமைத்தல் மற்றும் இயற்கை எழில் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பின்னர், எழும்பூரில் ரூ.9.33 கோடி மதிப்பில் வடிவமைப்பு, கட்டுதல், முதலீடு, இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் அடிப்படையில் தினசரி 100 மெட்ரிக் டன் மக்கும் கழிவுகளை பதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உயிரி எரிவாயு நிலையத்தின் செயல்பாட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த உயிரி எரிவாயு நிலையமானது நாளொன்றுக்கு 4000 கிலோ உயிரி எரிவாயு மற்றும் 15 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ. 9.33 கோடி மதிப்பில் வடிவமைப்பு, கட்டுதல், முதலீடு, இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் அடிப்படையில் தோட்டக்கழிவுகள் மற்றும் இளநீர் குடுவை கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, வார்டு-94-ல் சென்னை சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ் ரூ.45 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வில்லிவாக்கம் ஏரி புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரியின் புனரமைப்பு பணியில் தூர்வாருதல், அகலப்படுத்தி ஆழப்படுத்தி கொள்ளளவினை 20,000 கன மீட்டரிலிருந்து 2,90,000 கனமீட்டராக அதிகரித்தல், ஏரிக்கு கரைகள் அமைத்தல், சுற்றுச்சுவர் பணி மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல், மிதிவண்டி ஓடுதளம் அமைத்தல், நிர்வாக கட்டிடம், சுரங்க நடைபாதை அமைத்தல், ஏரியின் குறுக்கே பொழுதுபோக்கு தொங்கும் பாலம் கட்டும் பணி, ஏரி மற்றும் தொங்கும் பாலத்தில் மின் ஓளி தரும் வகையில் எல்.இ.டி மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியினால் அருகில் இருக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டு, இப்பகுதியிலுள்ள மக்களுக்கு பொழுது போக்கு இடமாகவும் அமையும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் பணிகளை விரைந்து முடித்து, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT