Published : 12 Jul 2021 04:25 PM
Last Updated : 12 Jul 2021 04:25 PM
தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் கொண்டோரைத் தமிழ் மக்கள் தூக்கி எறிவார்கள் எனப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காரைக்காலில் இன்று (ஜூலை 12) நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி கலந்துகொண்டார். காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் கட்சியினருடன் மாட்டு வண்டி ஓட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 130 டாலராக இருந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65-க்கும், டீசல் ரூ.53-க்கும், காஸ் சிலிண்டர் ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலராக இருக்கும் நிலையில், பெட்ரோல் லிட்டர் ரூ.101-க்கும், டீசல் லிட்டர் ரூ.94-க்கும், காஸ் சிலிண்டர் ரூ.850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது. இந்தியாவிலிருந்துதான் நேபாளத்துக்கு பெட்ரோல் அனுப்பப்படுகிறது. அங்கு லிட்டர் ரூ.70-க்கு விற்கும்போது, இந்தியாவில் மட்டும் உச்சபட்ச விலை விற்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் அலட்சியப் போக்கு மக்களைப் பெருமளவு பாதிக்கச் செய்துள்ளது.
எரிபொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால், பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
தமிழகத்தில் கொங்கு நாடு சர்ச்சை உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது. தமிழக மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த எண்ணம் கொண்டோரைத் தமிழ் மக்கள் தூக்கி எறிவார்கள். பாஜக இதுபோன்ற விஷம வேலைகளில் இறங்கியுள்ளது. இது பகல் கனவாகத்தான் முடியும். பாஜகவுக்கு தமிழக மக்கள் மரண அடி கொடுப்பார்கள்.
கரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறக்கும் முடிவை புதுச்சேரி முதல்வர் மறு பரிசீலனை செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுசீரமைப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்”.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், காரைக்கால் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT