Published : 12 Jul 2021 04:11 PM
Last Updated : 12 Jul 2021 04:11 PM
தமிழக மக்களிடம் கொங்கு நாடு என்ற பிரிவினை விதைகளை விதைக்க வேண்டாம் என, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்தார்.
கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா நிகழ்ச்சியில் இன்று (ஜூலை 12) பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"அண்ணா இந்த இயக்கத்தை முதலில் அரசியல் கட்சியாக உருவாக்கியபோதே 'திராவிட நாடு, திராவிடருக்கே' எனக் குரல் கொடுத்தவர். காலப்போக்கில் இந்த நாடு ஒரு வளம் பொருந்திய நாடாக, பலம் பொருந்திய நாடாக வர வேண்டும், அப்படி வருகின்ற நேரத்தில் தமிழகம் அனைத்து வகைகளிலும் தலைசிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமென்று அந்தச் சிந்தனையை உதிர்க்க வைத்துவிட்டார். மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு அரசியல் தலைவர், அவரே அந்தச் சிந்தனையை உதிர்க்க வைக்கச் சொன்னார் என்றால், இந்த மண்ணின் மீதும், இந்த நாட்டின் மீதும், இந்த மக்களின் மீதும் இந்த திராவிட இயக்கத்தின் மீதும் எவ்வளவு பற்று வைத்திருப்பார் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
ஒரு மாநிலக் கட்சி ஆட்சிக்கு வருகின்றபோது, மாநில அரசு அதிகாரங்களை வரைமுறைப்படுத்தி, அந்த அதிகாரத்துக்குள் மத்திய அரசு வரக்கூடாது என்பது அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்க்கின்ற ஒன்று. அந்த அடிப்படையில்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா, நேற்று வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆகியோரது சிந்தனை அப்படியாகத்தான் இருந்தது.
அதேபோல், அதிமுகவின் நிலைப்பாடும், அண்ணா எடுத்த நிலைப்பாட்டின்படிதான் நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். இப்போது திடீரென்று கொங்கு நாடு என்கின்றனர். யாரையோ அவர்கள் சிறுமைப்படுத்த வேண்டும் என இப்படி ஒரு விஷமத்தனமான சிந்தனையில் இறங்குவது என்பது நாட்டுக்கு நல்லதல்ல.
அது யார் கொண்டு வந்திருந்தாலும், யார் முன்னிறுத்தியிருந்தாலும் அவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். காரணம், அறிவியல் உலகத்தில் உலகமே ஒரு சிறு கைக்குள் இருக்கின்றபோது, பல்வேறு பாதுகாப்பு, வளர்ச்சி இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாடு பலமாக இருக்க வேண்டும், சக்தி படைத்ததாக உருவாக வேண்டும்.
இதன் அடிப்படையில், சிறு, சிறு மாநிலங்களாகப் பிரிகின்றபோது அந்த பலம் நிச்சயமாக குறையும் என்பது எனது கருத்து. அவர்கள் ஏதோ சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கருத்தைக் கூட அந்தக் கட்சியின் தலைமை ஏற்றுக்கொள்ளுமா என்பது கூடத் தெரியாது. அப்படித் தெரியாத பட்சத்தில், ஒரு தனி நபரின் கருத்துக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரை தென்கோடி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை உள்ள அனைத்து மக்களும், இது நம் நாடு, தமிழ்நாடு என்று தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சீரிய தூய சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த மக்களின் மனதில் கொங்கு நாடு என்ற பிரிவினை விதைகளை விதைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக அரசு முடியும் நிலையில், தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. தற்போது 9 மாதங்களாகப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை என அதிமுக மீது பழிபோட வேண்டாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை அதிக அளவில் நடப்பதாகத் தெரிவித்தீர்கள். இது போன்ற நிகழ்வுகள் என்பது எல்லா காலங்களிலும், எல்லா நிலையிலும் நடப்பது ஒன்றுதான். அதற்காக இப்போது வந்துள்ள அரசுதான் காரணம் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் அனுபவம் குறைவானவன் அல்ல. இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பாகக் காவல்துறை விழிப்புணர்வோடு இருந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொலை அந்த நேரத்தில் நடக்கும் ஒரு சம்பவம். ஆனால், கொள்ளை என்பது திட்டமிட்டு நடக்கின்ற ஒரு செயல். அப்படி திட்டமிட்டு கொள்ளையடிப்பவர்கள் யார் யார் என்பது காவல்துறைக்குத் தெரியும். இதுகுறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது புதியதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முனைப்போடு செயல்படுவதாகக் கேள்விப்பட்டேன். அவருடைய பணியை வேகப்படுத்தினால் இதுபோன்ற குற்றங்கள் இந்த மாவட்டத்தில் குறைய வாய்ப்புள்ளது".
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT