Published : 12 Jul 2021 12:23 PM
Last Updated : 12 Jul 2021 12:23 PM
பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், பார்வை மாற்றுத்திறனாளி சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற வாதத்தை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வேலூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில், சென்னை வில்லிவாக்கம் ஆட்டோ ஓட்டுநர் அன்புச்செல்வனுக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் வந்தது.
பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணின் சாட்சியைக் கண்ணுற்ற சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், செவி வழி சாட்சியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பார்வை மாற்றுத்திறனாளி என்றாலும், உலகில் நடப்பவற்றை ஒலியால் பார்த்து, அருகில் இருப்பவர்களை அவர்களது குரலின் சத்தத்தால் அடையாளம் கண்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த சாட்சியத்தைப் புறம் தள்ளமுடியாது என நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் தெரிவித்தார்.
சராசரியான மனிதனின் சாட்சியத்தை விட எந்த வகையிலும் மாற்றுத்திறனாளிகளின் சாட்சியத்தைத் தரம் தாழ்ந்ததாகக் கருத முடியாது. அப்படிக் கருதினால், அரசியலமைப்புச் சட்டத்தில் அனைவரும் சமம் என்ற அடிப்படைக் கொள்கைக்கே முரணாகி விடும் என நீதிபதி தெரிவித்தார். வழக்கைத் திறமையாகவும், விரைவாகவும் புலன் விசாரணை செய்த வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT