Published : 12 Jul 2021 11:05 AM
Last Updated : 12 Jul 2021 11:05 AM

மேகதாது அணை விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மேகதாது என்ற இடத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்தினால், தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீரின் அளவு குறைந்துவிடும் என்பதால், அணையைக் கட்டக் கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், அணை கட்டுவதைத் தடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்து, எடியூரப்பாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மேகதாது அணை திட்டத்தைத் தொடரக் கூடாது என்று கூறியிருந்தார்.

அதன்பின், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை மற்றும் மார்க்கண்டேய நதியில் கர்நாடகம் கட்டியுள்ள புதிய அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். ஆனால், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவோ, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாதகமான அம்சங்கள் கர்நாடகாவுக்கு இருப்பதால், அணையைக் கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ளார்.

இந்தச் சூழலில், தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று (ஜூலை 12) காலை 10.30 மணிக்குக் கூட்டம் நடைபெறும் எனவும், இதில் பங்கேற்க சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, இன்று காலை 10.30 மணியளவில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. இதில், சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், திமுக சார்பாக ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, விசிக சார்பாக திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., மதிமுக சார்பாக எம்எல் பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக கே.பாலகிருஷ்ணன், பாமக சார்பாக ஜி.கே.மணி, வெங்கடேஷ், அரியலூர் சின்னப்பா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மேகதாது தொடர்பாக, பாஜகவின் நிலைப்பாடு தெரியவரும். மேலும், மேகதாது தொடர்பாக எந்த வகையில் சட்டப் போராட்டம் மேற்கொள்வது என்ற முடிவும் எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x